
தமிழ் திரையுலகில் "உழைப்பாளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் டான்ஸ் அசிஸ்டன்டாக களம் இறங்கி இன்று தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாகவும், டான்ஸ் மாஸ்டராகவும் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் திகழ்ந்து வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் ஒரு நடிகர், இயக்குனர் மற்றும் நடன மாஸ்டர் என்பதை தாண்டி ஒரு மிகச் சிறந்த சமூக ஆர்வலர் என்று கூறினால் அது மிகையல்ல.
இவர் நடிக்க துவங்கிய முதல் திரைப்படத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பல வகையில் குரல் கொடுத்து வந்தவர். அதை வெறும் குரலோடு நிறுத்திவிடாமல், தனக்கு கிடைக்கும் பணத்தில் மிகப்பெரிய அளவில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தொடர்ச்சியாக உதவி செய்து வருகிறார்.
மேலும் தன்னைப்போல சமூக பணியில் ஈடுபடும் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதோடு, அவர்கள் வாயிலாகவும் இவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பல அறக்கட்டளைகள் மூலம் உதவிகளை செய்து வரும் ராகவா லாரன்ஸ் அவர்கள், "மே 1 முதல் மாற்றம்" என்கின்ற தலைப்பில் ஒரு புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளார்.
அதன்படி தன்னால் விதையிடப்பட்டு இன்று விருட்சமாக வளர்ந்திருக்கும் பல மாணவ மாணவியர்கள், இனி அவர்கள் ஈட்டும் பணத்திலிருந்து தங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்யவிருக்கின்றனர். அது குறித்த ஒரு அறிவிப்பை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு சினிமா பரபலங்களும் அவருக்கு உதவ இந்த "மே 1 முதல் மாற்றம்" நிகழ்வில் பங்கேற்க ஒன்று கூடி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட்டான கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முதல்முறையாக அவரோடு இணைந்து நடித்த முன்னணி நடிகரும் நடிப்பு அரக்கனுமான எஸ். ஜே சூர்யா மே 1 முதல் மாற்றம் என்கின்ற நிகழ்வில் ராகவா லாரன்ஸோடு கைகோர்க்க இருப்பதாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் எனக்கு ஜிகர்தண்டா திரைப்படத்தில் கிடைத்த ஒரு சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். எனது பாய் சீசர் சொல்லும் அனைத்து விஷயத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். மே 1 முதல் மாற்றம் நிகழ்வில் அவரோடு இணைந்து அவர் கைகாட்டும் நபர்களுக்கு உதவி செய்ய நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.