Simbu Vs Vels Production : சிம்பு நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாக காத்து வந்த திரைப்படம் தான் "கொரோனா குமார்". இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கால்ஷீட் பிரச்சனை தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்து வருகிறார் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் எந்த ஹிட் திரைப்படங்களையும் கொடுக்காத சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் விதிக்க உள்ளதாக சில தகவல்களும் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சிம்பு தான் ஒப்புக்கொண்ட படங்களுக்காக, முன்பணமும் வாங்கிவிட்டு படப்பிடிப்புக்கு செல்லாமல் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று கூறி தொடர்ச்சியாக அவர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வேல்ஸ் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு தயாரிக்க இருந்த "கொரோனா குமார்" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமானார்.
சுமார் 9 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டதாகவும், அதில் நான்கு கோடி ரூபாய் அவருக்கு முன்பணமாக அளிக்கப்பட்டதாகவும் வேல்ஸ் நிறுவனம் தற்பொழுது தெரிவித்துள்ளது. ஆனால் அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படபிடிப்பிற்கு வரவில்லை என்றும், இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் வீல்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
நீதிமன்றத்தில் சிம்புவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பல மாதங்களாக இந்த வழக்கு நீண்டு கொண்டே வருகிறது. இந்த சூழலில் இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, ஓய்வு பெற்ற நீதிபதியான கண்ணன் என்பவரை நியமித்து, உடனடியாக இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இறுதியாக கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்கிற படத்தில் நடித்த நடிகர் சிம்பு, தற்போது ராஜ் கமல் இயக்கத்தில், பிரபல இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக்கி வரும் தனது 48வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.