உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக சதி வலை... பொங்கி எழுந்த கவிஞர் வைரமுத்து!

By Asianet TamilFirst Published Apr 22, 2019, 7:54 AM IST
Highlights

ஒரு காலத்தில் ஓர் ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டும் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சாவும், மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். 

இந்தியத் திருநாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராகவே சதிவலை பின்னப்படும் என்றால் பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கவிஞர் வைரமுத்து. 
சென்னையில் அமுதசுரபி அறக்கட்டளை, சென்னை முத்தமிழ்ச் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வைரமுத்து தலைமை தாங்கி கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியதைப் பற்றி குறிப்பிட்டு பேசினார்.
 “இங்கே 100 கவிஞர்களுக்குப் பரிசு தருவதைக் காலம் எனக்கிட்ட கட்டளையாகவே நினைக்கிறேன். முத்தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துகிறேன். ஒரு வாக்காளனுடைய விரலில் தேர்தல் ஆணையம் கரும்புள்ளி வைக்கலாம். ஆனால், வெற்றிபெற்ற வேட்பாளர் வாக்காளர்களுடைய முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளியை வைத்துவிடக் கூடாது. இதை  இதயம் வலிக்க எச்சரிக்கிறது. இலக்கியத்தையும் அறத்தையும் பற்றிப் பேசாவிட்டால் அதை உயர்த்திப் பிடிக்க நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நிறுவனம் இந்தியாவில் இருக்கிறது? ஆனால், நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று இந்தியாவில் நிலவிக்கொண்டிருக்கிறது.


ஒரு காலத்தில் ஓர் ஆளுமையைச் சிறுமைப்படுத்த வேண்டும் கண்ணுக்குத் தெரியாமல் கஞ்சாவும், மதுவும் வைத்துக் கைது செய்வார்கள். இப்போதெல்லாம் மாதுவை வைத்தே பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். நீதிபதியின் மூளையை முடக்குவது, அவரது நேரத்தைத் திருடுவது, அவரது தூக்கத்தைக் கொள்ளையடிப்பது, அவரது தொழிலைத் தொலைப்பது போன்றவைதான் இந்தச் சதியின் நோக்கம். இந்தியத் திருநாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே சதிவலை பின்னப்படும் என்றால், பாமரனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
இந்திய நாட்டின் விழுமியங்கள் வீழ்கிறபோதெல்லாம் இலக்கியம் மடிந்துக்கொண்டே அழுகிறது. ஒரு காலத்தில் வழிமுறையாக இருந்த லஞ்சம், இன்று வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறது. ஓட்டுக்குப் பணம் தரும் கலாசார வீழ்ச்சிக்குக் காரணம் யார்? வாக்காளரா? வேட்பாளரா? நேர்மையாக வாக்களிக்கும் வாக்காளன் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்கிறான் அல்லது எதிர்க்கட்சியைத் தோற்கடிக்கிறான். ஆனால், பணம் பெற்றுகொண்டு வாக்களிக்கும் வாக்காளன் தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்கிறான்.
இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார். மீடு விவகாரம் வெடித்தபோது கவிஞர் வைரமுத்துக்கு எதிராக பாடகி சின்மயி பாலியல் புகார் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!