அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!... விவேக் உடலுக்கு கவி பாடி கண்ணீர் அஞ்சலி செலுத்திய வைரமுத்து...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 17, 2021, 12:24 PM IST
Highlights

என்னை பொறுத்தவரை ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டேன். எனது கவிதையின் கொள்கை பரப்புச் செயலாளரை இழந்துவிட்டேன். 

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக சிந்தனையாளர் என பல பாதைகளிலும் சிறப்பாக பயணித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். ஆஞ்சியோ செய்யப்பட்டு, எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது திரையுலகினரை மீளா முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 


                                           
தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் விவேக் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சோசியல் மீடியா மூலமாகவும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரசு வைரமுத்து விவேக் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, என்னை பொறுத்தவரை ஒரு நல்ல சகோதரனை இழந்துவிட்டேன். எனது கவிதையின் கொள்கை பரப்புச் செயலாளரை இழந்துவிட்டேன். தமிழ் திரையுலகம் நீண்ட காலமாக  சேமித்து வைத்திருந்த செல்வத்தை இழந்துவிட்டது. நகைச்சுவை நடிகர்கள் வருவார்கள், இருக்கிறார்கள், ஆனால் விவேக் தனித்தடம் பதித்தவர். சீர்திருத்தம் இருக்க வேண்டுமென தன்னுடையை கலையை செதுக்கிக் கொண்டவர். ரசிகர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள்?, திரையுலகம் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறது?, மனிதர்கள் மட்டுமா துக்கம் கொண்டாடுகிறார்கள்?, இல்லை விவேக் நட்ட மரங்கள், செடி கொடிகள் கூட அவருக்காக கண்ணீர் சிந்துகின்றன என உருக்கமாக பேசினார்.

வைரமுத்து நேரில் அஞ்சலி pic.twitter.com/wD5zLNUeI5

— Velmurugan Paranjothy/ ப.வேல்முருகன் (@Vel_Vedha)

இதற்கு  முன்னதாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை கவிதையாக பதிவிட்டுள்ளார். 

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க்  கதாநாயகன். 

click me!