சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தன்னுடைய பெயர், போட்டோ, குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், சமீப காலமாக இளம் இயக்குனர் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது, கோலமாவு கோகிலா, டாக்டர், போன்ற படங்களை இயக்கிய... இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து தகவல் அவ்வப்போது, வெளியாகி வருகிறது.
குறிப்பாக 'படையப்பா' படத்திற்கு பிறகு, ரம்யா கிருஷ்ணன்.. ரஜினிகாந்த் உடன் இப்படத்தில் இணைந்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர் வசந்த் ரவி, மோகன் லால், தமன்னா, யோகி பாபு, விநாயக், ஜாக்கி ஷெரிப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய பெயரையோ அல்லது போட்டோ, மற்றும் குரலை, தன்னுடைய அனுமதி இல்லாமல் அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது என தன்னுடைய வழக்கறிஞர் சுப்பையா மூலம் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில், ரஜினிகாந்தின் போட்டோக்கள், கம்ப்யூட்டர் அனிமேஷன் போன்ற அனைத்துமே ரஜினிக்கு மட்டுமே சொந்தம் என தெறிவிக்கபட்டுள்ளது. அடுத்தவர்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதை தடுக்கவே இந்த முயற்சி என கூறப்படுகிறது. இதனை மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் ரஜினிகாந்தின் இந்த முடிவை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.