நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் விமர்சித்து பேசிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரச்சனைக்காக அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்து நேரில் ஆஜராக வேண்டும் என தற்போது சம்மன் அனுப்பியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இருதயராஜ் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரிடம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்று படகுழு கூறியதால், தன்னுடைய பழைய படங்களில் நடித்தது போன்ற வில்லத்தனமான கதாபாத்திரம் இந்த படத்திலும் இருக்கும் என நினைத்ததாகவும், ஆனால் திரிஷாவை தன்னுடைய கண்ணில் கூட படக்குழு காட்டவில்லை என மிகவும் கொச்சையான விதத்தில் அந்த பேட்டியில் த்ரிஷா குறித்து பேசி இருந்தார்.
இந்த பேட்டியை பார்த்துவிட்டு நடிகை திரிஷா, இது குறித்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் அவருடன் நடிக்காதது மிகவும் நல்லது என்றும், இனியும் எந்த படத்திலும் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என கூறினார்.
இந்த விவகாரத்தில், குஷ்பூ, ரோஜா, வானதி சீனிவாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சிரஞ்சீவி, கார்த்திக் சுப்புராஜ், உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, த்ரிஷாவுக்கு ஆதரவாக பேசினர். மன்சூர் அலிகான் தன்னுடைய முழு பேட்டியை பார்க்காமல் யாரும் எந்த முடிவும் செய்யக்கூடாது என்றும், நான் த்ரிஷா குறித்து எந்தவித தவறான கருத்தையும் வெளியிடவில்லை என கூறினார். மேலும் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்பதிலும் உறுதியாக தெரிவித்த அவர் சிலர் சதி செய்து தன்மீது அவதூறு பரப்புவதாக கூறினார்.
மேலும் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபி இடம் கோரிக்கை வைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில், மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக நாளைய தினம் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D