எஸ்.பி.பி. உயிர் பிரிய காரணம் என்ன?... மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 25, 2020, 2:37 PM IST
Highlights

தற்போது எஸ்.பி.பி. உயிர் பிரிந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக மகன் சரண் அறிவித்துள்ளார். பாடும் நிலா பாலு எப்படியாவது எழுந்து வந்துவிட்டார் என பிரார்த்தனை செய்து வந்த ரசிகர்களும், திரையுலகினரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

தற்போது எஸ்.பி.பி. உயிர் பிரிந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகஸ்ட் 5ம் தேதி எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா மற்றும் நிமோனியா காரணமாக அவருக்கு ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எங்களின் மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வந்தது. செப்டம்பர் 4ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்தது. 

 

இந்நிலையில் அதிகபட்ச உயிர் காக்கும் கருவிகள் மற்றும் எங்கள் குழுவின் சிறந்த முயற்சியையும் தாண்டி இன்று காலை அவரின் நிலைமை மேலும் மோசமடைந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் செப்டம்பர் 25ம் தேதி மதியம் 1.04 மணிக்கு உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி-யின் மறைவிற்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

click me!