பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் - பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

By Ganesh AFirst Published Feb 19, 2024, 11:00 AM IST
Highlights

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ரூ. 500 கோடி செலவில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு காலத்தில் சினிமா ஷூட்டிங் என்றாலே சென்னை தான் என சொல்லும் அளவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சினிமா பிரபலங்கள் சென்னைக்கு படையெடுத்து வந்து படப்பிடிப்புகளை நடத்தி வந்தனர். பின்னர் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டி பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டதை அடுத்து நிலைமை தலைகீழாக மாறியது. பெரும்பாலான படப்பிடிப்புகள் அங்கு தான் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையிலும் அது போன்ற ஒரு திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு செவி சாய்க்கும் விதமாக கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பூந்தமல்லியில் ரூ.140 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையும் படியுங்கள்... 2030க்குள் குடிசை இல்லா தமிழகம்... ஒரு வருடத்தில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்.! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதிநவீன வசதிகளுடன் இந்த திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்றும் அரசு தனியார் பங்களிப்புடன் அது அமைக்கப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். இந்த அறிவிப்பு திரைத்துரையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்... தமிழ்நாடு பட்ஜெட் 2024: திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு!

click me!