
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
‘நாயகன்’ படத்திற்குப் பின்னர் மணிரத்னம் கமலஹாசன் இணைந்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் டிரெய்லரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படம் இன்று (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை. “கன்னடம் தமிழில் இருந்து தான் பிறந்தது” என ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
கமலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியிடப்பட மாட்டாது என கர்நாடக வர்த்தக சபை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகிய கமலஹாசனுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் கமல் மன்னிப்பு கேட்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படம் இன்று வெளியாகவில்லை.
மற்ற அனைத்து மொழிகளிலும் படம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் காலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் காலை காட்சி 9-க்கு தொடங்கி இறுதிக்காட்சி இரவு 2 வரை மொத்தம் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் ‘தக் லைஃப்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் நிச்சயம் படம் ஹிட் அடிக்கும் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.