பாகுபலியின் வெற்றியால் ரூ.500 கோடி ருபாய் பட்ஜெட்டில் உருவாகும் 'ராமாயணம்' கதை...

First Published May 14, 2017, 2:20 PM IST
Highlights
The story of a Rs 500 crore film on Ramayana


ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்த  'பாகுபலி' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ராமாயணம்' தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஏராளமான பொருட் செலவில் ரூ.500 கோடி செலவில் பிரமாண்ட  படமாக தயாராகிறது.

வரலாற்று கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்  மொழிகளில் வெளியான 'பாகுபலி-2' படம் உலகம் முழுவதும்9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிவதால் ரூ.1,500 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் வசூலில் சாதனை புரிந்த முதல் இந்திய படம் என்ற பெருமையை `பாகுபலி-2' பெற்று இருக்கிறது. இந்த படத்தின் வெற்றியால் திரையுலகினர் பார்வை சரித்திர, புராண கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது.

இதிகாச காவியமான மகாபாரதத்தை ரூ.1,000 கோடி செலவில் சினிமா படமாக எடுக்கப்போவதாக பிரபல மலையாள டைரக்டர் வி.ஏ.குமார் அறிவித்து இருக்கிறார். தமிழ், மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதில் பீமன் வேடத்தில் நடிக்க மோகன்லாலை தேர்வு செய்துள்ளனர்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருக்கும் 'சங்கமித்ரா' என்ற சரித்திர படமும் தயாராகிறது. இந்த நிலையில் 'ராமாயணம்' கதையையும் சினிமா படமாக எடுக்கப்போவதாக தெலுங்கு தயாரிப்பாளர் 'அல்லு அரவிந்த்' தற்போது அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது; "சரித்திர புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதை `பாகுபலி-2' படம் நிரூபித்து இருக்கிறது. அந்த உந்துதலில் 'ராமாயணம்' கதையை படமாக்க திட்டமிட்டு உள்ளோம்". 

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.500 கோடி செலவில், 3டியில் இந்த படம் தயாராகிறது. இதில் "ராமர், சீதை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தமிழ், தெலுங்கு பட உலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம்'' இவ்வாறு அவர் கூறினார். 'ராமாயணம்' படத்தில் சீதை வேடத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட பல கதாநாயகிகள் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ராமாயணம் கதை ஏற்கனவே அருண்கோவில், தீபிகா ஆகியோர் நடித்து டெலிவிஷன் தொடராக தயாரிக்கப்பட்டு தூர்தஷனில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 

click me!