தளபதி விஜய் தன்னுடைய அரசியல் வருகையை, கட்சி பெயரை வெளியிட்டு உறுதி செய்துள்ள நிலையில்.. தற்போது எக்ஸ் தளத்தில் தன்னுடைய கட்சியின் பெயரில் அக்கவுண்ட் துவங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் விஜய் நடித்து வரும் இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி உள்ளது. நடிப்பில் ஒரு பக்கம் தளபதி தீவிர கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தன்னுடைய அரசியல் வருகையையும் உறுதி செய்து வந்தார்.
குறிப்பாக கடந்த ஆண்டு முதல், விஜயின் அரசியல் நகர்வு பேச்சை தாண்டி செயலிலும் உணர முடிந்தது. சட்டமன்ற தொகுதிகளில் அதிக மதிப்பெண்ணோடு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்த உற்சாகப்படுத்திய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் மறைவு நாளில் ரசிகர்கள் மூலம் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இனி ஒன்லி அரசியல்.... சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார் விஜய் - அப்போ கடைசி படம் இதுதானா?
மேலும் மழை பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, தன்னுடைய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மூலமும் புஸ்ஸி ஆனந்த் மூலமும் பல்வேறு உதவிகளை செய்த விஜய், திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, நேரடியாக சென்று மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிலையில் தளபதி விஜய் கடந்த வாரம், நிர்வாகிகளை சந்தித்து பேசிய போது தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி விரைந்து சென்ற புஸ்ஸி ஆனந்த் தளபதியின் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். அதன்படி தற்போது தளபதி விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சியை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் விஜய் தன்னுடைய கட்சி பெயரில் எக்ஸ் தளத்தில் TVK விஜய் என்கிற பெயரில், அக்கவுண்ட் ஒன்றையும் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.