‘தலைநகரம்’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வருகிறார்.
பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அபிமன்யு' திரைப்படம் தமிழில் ‘தலைநகரம்’ என்ற பெயரின் ரீமேக் செய்யப்பட்டது. சுந்தர் சி, ஜோதிமயி, மற்றும் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பிளாக்பஸ்டர் வெற்றியையும் ருசித்தது.
குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நடிகர் வடிவேலுவின் காமெடி என கூறலாம். தன் ஊரிலிருந்து நடிகை திரிஷாவை திருமணம் செய்யும் லட்சியத்தோடு சென்னை வரும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. பின்னர் கதாநாயகியிடம் முகத்தை காட்டியே மயக்கம் போட செய்வது, மற்றும் சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷன் திரையரங்கத்தையே சிரிப்பொலியால் மூழ்கடித்தது.
இந்நிலையில், தற்போது ‘தலைநகரம்’ படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வி.இசட்.துரை இயக்குகிறார். இப்படத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தலைநகரம் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் சுந்தர் சி சிகரெட் பிடித்தபடி போஸ் கொடுத்தவாரு இருக்கிறார். மேலும் அதில் அவரது கதாபாத்திரத்தின் பெயரான ‘ரைட்டு’ மீண்டும் வந்துவிட்டார் என குறிப்பிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘ரைட்டு’ வந்துட்டாரு ‘நாய் சேகர்’ எங்க? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தலைநகரம் படம் மிகப்பெரிய வெற்றியடைய காரணமாக இருந்த வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் இல்லாமல் ‘தலைநகரம் 2’ தயாராகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.