
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் கிளப்பப்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னட திரை உலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். 46 வயதில் புனீத் ராஜ்குமார் மரணமடைந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். கடந்த 31-ஆம் தேதி அரசு முழு மரியாதையுடன் புனீத் ராஜ்குமாரின் உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள அவருடைய பெற்றோர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய சமாதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று அஞ்சலி செலுத்தியவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது புனீத் ராஜ்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சிலர் சமூக ஊடகங்கங்களில் கருத்துக்களைத் தெரிவிக்க, அது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேலும், புனீத் ராஜ்குமாருக்கு சிகிச்சை தாமதிக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், புனீத் ராஜ்குமாரை முதலில் பரிசோதித்த அவருடைய மருத்துவர் டாக்டர் ரமணா ராவுக்கு புனீத்தின் ரசிகர்களால் பிரச்சினை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பெங்களூரு போலீஸ், டாக்டர் ரமணா ராவின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளது.
புனீத் ராஜ்குமாருக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி டாக்டர் ரமணா ராவ் ஏற்கெனவே பேட்டி அளித்திருந்தார். “புனீத் ராஜ்குமாரை அவருடைய நண்பர்கள் அழைத்து வந்தனர். சிகிச்சைக்கு வந்தபோது சோர்வாக இருந்தார். அவருக்கு இசிஜி எடுத்து பார்த்தோம். இதயதுடிப்பில் சிக்கல் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவருக்கு வியர்வை அதிகமாக வெளியேறியது. இதனையடுத்து அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்தேன்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.