காந்த கண்களும், கவர்ச்சி தொடைகளுமாய் பாலிவுட்டை பாடாய்ப்படுத்திய ஸ்ரீதேவி: மும்பை நோக்கி வரிசைகட்டிய தமிழ் திரை ஆளுமைகளின் முன்னோடி. 

First Published Feb 25, 2018, 10:11 AM IST
Highlights
sri devi death in dubai


கோலிவுட், டோலிவுட்டில் இரண்டு படங்கள் செய்துவிட்ட எல்லா ஹீரோயின்களுக்கும் ஒரு கனவு இருக்கும். அது!...பாலிவுட் சென்று ‘கான்’களுடன் ஒரு கட்டிப்பிடி பாடல் ஆடிவிட வேண்டுமென்பதுதான். இவர்களுக்குள் இப்படியொரு எண்ணம் ஊற்றெடுக்க ஒரே காரணம், ஸ்ரீதேவி! என்கிற சக்ஸஸ்ஃபுல் ஐகான் மட்டுமே. 

இந்தி! எனும் மொழியை பேசத்தகாத வஸ்துவாக சித்திரப்படுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து சில ஆண்டுகளில், தமிழகத்திலிருந்து இந்தி திரைப்படத்தினுள் கால் வைத்தார் ஸ்ரீதேவி. 1978-79ல் ‘சால்வ ஷாவன்’தான் அவரது முதல் பாலிவுட் திரைப்படம். பெரிதாய் கைகொடுக்கவில்லை. இதனால் தனக்கு தாறுமாறாக ஆதரவு அளித்துக் கொண்டிருந்த தென்னிந்திய படங்களில் ஹிட் அடித்தவாறே ஒரு கண்ணை இந்தியின் மேல் வைத்துக் கொண்டே இருந்தார். பின் 1983-ல் ஜீதேந்திராவுடன் ஜோடி போட்ட ‘ஹிம்மத்வாலா’வின் பிளாக்பஸ்டர் ஹிட் அவரை பாலிவுட்டை பல ஆண்டுகள் ஆளப்போகும் அரசியாக அங்கீகரித்து ஐ.டி.கார்டை வழங்கியது’. அதன் பிறகு பாலிவுட் ராஜ்ஜியத்தை தன் காந்த  கண்களாலும், கவர்ச்சி தொடைகளாலும் கட்டி ஆண்டார் ஸ்ரீதேவி. 

பொதுவாக தென்னிந்திய திரை ஆளுமைகளுக்கு இந்தி திரையுலகம் ரத்தின கம்பளம் கூட வேண்டாம், கிழியாத  ஜமக்காளத்தை கூட விரிக்க முன் வராது. அதற்கு காரணம் எங்கோ சிவகாசியில் பிறந்து மும்பையை ஆள வந்த ஸ்ரீதேவியின் மேலிருந்த பொறாமையால்தான். 

ஆனாலும் ஸ்ரீதேவிக்கு அங்கிருக்கும் தனி இடத்தைப் பார்த்துவிட்டு பாலிவுட்டில் நடித்தே தீருவேன் ! என்று அடம்பிடித்த நடிகர், நடிகைகள் ஏராளம். கமல் மற்றும் ரஜினியை இதில் ’விதிவிலக்கு’ ஆக்கிக் கொள்ளலாம். காரணம் அவர்களுக்கு இந்திய திரையுலகில் இருந்த கேன்வாஸ் வேறு லெவல்.

ஸ்ரீதேவியின் எராவோடு இணைந்தும், அவருக்குப் பின்னும் வந்த நடிகைகள் பலர் பாலிவுட்டில் கால் வைக்க துடித்தனர். ஸ்ரீதேவியின் சக நடிகைகளான அம்பிகா, ராதா, ஸ்ரீபிரியா போன்றோரும் சரி, அதன் பிறகு வந்த நதியா காலங்களாகட்டும், குஷ்பூ, சிம்ரன்களாகட்டும், அதன் பிறகு திரை தொட்ட அசின், த்ரிஷாவாகட்டும் எல்லோருக்கும் பாலிவுட் கனவு பாடாய்படுத்தியது. ஆனால் இதில் நதியா, நயன்தாரா  போன்றவர்கள் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு கிடைத்தும் பாலிவுட்டை புறக்கணித்தார்கள். 

இயக்குநர் ப்ரியதர்ஷன் புண்ணியத்தில் ‘கட்டாமிட்டா’ மூலம் பாலிவுட்டில் நுழைந்த த்ரிஷாவால் ஜொலிக்க முடியவில்லை. அசின் அங்கே சென்று ஜொலிக்க முயற்சித்து ‘கான்’களின் பிடியில் சிக்கி பின் தொழிலதிபரை கரம்பிடித்து செட்டிலானதுதான் மிச்சம். 

ஜோதிகா, நக்மா, தமன்னா, காஜல் அகர்வால் போன்றோர் பிறப்பாலேயே வட இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்திருந்தும் கூட பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்படி எந்த தடமும் பதிக்க முடியவில்லை. ஸ்ரீதேவியை பார்த்து அரிதாரம் பூசிக்கொண்ட  இந்த நட்சத்திரங்களின் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் யாராலும் ஸ்ரீதேவி தொட்ட உச்சத்தில் ஒரு சதவீதத்தை கூட அடையமுடியவில்லை. 

அதே நேரத்தில் தமிழ் திரையுலகின் ஆண் ஆளுமைகளில் தனுஷ் இதுவரையில் இரண்டு படங்களை இந்தியில் முடித்துவிட்டார். தனுஷ் என்றால் யார்? என்று வட இந்தியர்கள் அடையாளம் தெரியுமளவுக்கு அவர் கால் பதித்தது அமிதாப்,  பால்கி ஆகியோரின் புண்ணியத்தால் நிகழ்ந்திருக்கிறது. 

அதேவேளையில் பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற தமிழ் திரை ஆளுமைகள் அங்கிருக்கும் ‘கான்’களை தங்களுக்கு பின்னால் இன்று அலையவிட்டுக் கொண்டிருப்பதற்கு அடிக்கல் அமைத்தவர் ஸ்ரீதேவியேதான்! என்றால் அதில் துளியும் பொய்யில்லை. 

click me!