சீமான் கதையை திருடினாரா லிங்குசாமி?... தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 8, 2021, 4:49 PM IST
Highlights

லிங்குசாமி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தாராளமாக அந்த கதையினை பயன்படுத்தலாம் என்றும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரைப்படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதையும், ’பகலவன்’ கதையும் ஒரே மாதிரி இருப்பதால் இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்த பிரச்சனை சமீபத்தில் வெடித்தது அல்ல, 2013ம் ஆண்டே கதை திருட்டு தொடர்பாக லிங்குசாமி மீது சீமான்  புகார் அளித்திருந்தார். 

2013ம் ஆண்டு லிங்குசாமி, நடிகர் சூர்யா இணைந்து ஒரு படம் எடுப்பதாக முடிவானது. அதாவது இவர்கள் காம்பினேசனில் வெளியான ‘அஞ்சான்’ படத்திற்காக தயாரிக்கப்பட்ட முதல் கதை தான் அது. ஆனால் அந்த கதை தன்னுடைய பகலவன் படக்கதையைப் போலவே இருப்பதாக சீமான் அப்போதைய இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்க முடிவெடுத்தார். ஆனால் அப்போதைய இயக்குநர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த இயக்குநர் விக்ரமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் தலையீட்டால் இந்தப் பிரச்சினை பேசி, சுமுகமாகத் தீர்க்கப்பட்டது. இதன்படி, சீமான் தமிழிலும், லிங்குசாமி மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

தற்போது 7 வருடங்களைக் கடந்த பிறகு, தன்னுடைய அஞ்சான் படத்திற்கான முதல் கதையை தெலுங்கில் படமாக்க லிங்குசாமி திட்டமிட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகை விட்டு விலகி, முழு நேர அரசியல்வாதியாக வலம் வரும் சீமான், மீண்டும் பகலவன் பட பிரச்சனையை கையில் எடுத்தார். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் சீமான் அளித்த புகாரின் பேரில் பாக்யராஜ் தலைமையிலான குழு அதிரடி முடிவெடுத்துள்ளனர். 

அதாவது 2013ம் ஆண்டே இந்த பிரச்சனையில் இருவருக்கும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும், சீமானின் புகாரில் முகாந்திரம் இல்லை என்றும் அதனால் லிங்குசாமி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் தாராளமாக அந்த கதையினை பயன்படுத்தலாம் என்றும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

click me!