நடிகர் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்... நாடு முழுதும் சிறப்பான கொண்டாட்டம்

By manimegalai aFirst Published Oct 1, 2018, 11:37 AM IST
Highlights

நடிப்புலகில் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
 

நடிப்புலகில் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள் விழா இன்று வெகு சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிவாஜி கணேசன் இளமை முதல் நடிப்பின் மீது கொண்ட காதல் காரணமாக சிறுவனாக இருக்கும்போதே பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அப்போதே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியும் வந்தார். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடனும் சிவாஜி கணேசன் பணியாற்றியுள்ளார். 

சிறந்த நடிப்பு, தெளிவான உச்சரிப்பு, கம்பீரமான பேச்சு ஆகியவை சிவாஜிக்கு கூடுதல் சாதகமாக அமைந்தது. வீரபாண்டிய 
கட்டபொம்மன், ராஜராஜ சோழன், மனோகரா, கப்பலோட்டிய தமிழன், திருவிளையாடல் உள்ளிட்ட படங்கள் இதற்கு சான்றாக 
அமைந்தன. இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசார் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்பை கண்டு வியந்த பெரியார், அவரை சிவாஜி என அழைத்தார். அன்று முதல் கணேசன், சிவாஜி கணேசன் என்று அழைக்கப்பட்டார். திரையுலகிற்கு நித்தம் நித்தம் புதுமுகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில், எங்களுக்கு சிவாஜி ஒரு பயிற்சி புத்தகம் என்றே பல்வேறு நடிகர்களும் கூறி வருகின்றனர். 

300-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், 9 தெலுங்கு படங்கள், 2 இந்தி படங்கள், ஒரு மலையாள படம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சிவாஜி கணேசன், ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆவார். நடிகர் சிவாஜி கணேசன், ஆப்பிரிக்க - ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ) சிறந்த நடிகருக்கான விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது, 1962-ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, நயாகரா மாநகரின் ஒருநாள் நகர தந்தையாக கௌரவிக்கப்பட்டார். அவரது 91-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னை, அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் இருக்கும் சிவாஜி கணேசனின் திருவுருவ சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவாஜி மன்ற ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

click me!