சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் சூர்யா 42 படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தை தற்காலிகமாக சூர்யா 42 என அழைத்து வந்தனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். சூர்யா 42 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்கிறார். புஷ்பா படத்திற்கு பின் அவர் இசையமைக்கும் படம் இது என்பதால் இப்படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சூர்யா 42 பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜாவும், யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தை இந்தியா முழுவதும் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படியுங்கள்... இம்முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டப் போவதில்லை... புரமோஷன் டூர் பிளானை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்
இந்நிலையில் சூர்யா 42 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே பெயரில் ரஜினி படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு ரஜினி நடித்த இந்தி படத்திற்கும் கங்குவா என பெயரிடப்பட்டு இருந்தது. இது மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
சூர்யா 42 படத்தின் டைட்டில் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த டீசரின் இறுதியில் இப்படம் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியன் 2 படமும் பொங்கல் ரிலீசை டார்கெட் செய்வதால் இந்த இரு படங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... கமலுக்காக சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்... ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெறித்தனமான ரசிகரா இருக்காரே!