Maanaadu | ”பாவம் சிம்பு”!! நெறிக்கும் மாநாடு வியாபார சர்ச்சை.. உதயநிதியிடம் மோதும் டி.ஆர்...

By Ganesh RamachandranFirst Published Nov 25, 2021, 2:38 PM IST
Highlights

ஒரு வழியாக எல்லா தடைகளையும் தாண்டி ரிலீஸானாலும் சிம்புவின் மாநாடு படத்துக்கு சிக்கல் குறையவில்லை. டிவி சாட்டிலைட் உரிமை விற்பனை தொடர்பாக இப்போது புதிய புயல் கிளம்பியுள்ளது.

சிம்பு என்றாலே சர்ச்சைகள் என்றாகிவிட்டது. என்ன ராசியோ தெரியவில்லை, சிம்பு படம் வந்தாலே ரிலீஸ் நேர பஞ்சாயத்துகள் கட்டாயம் வந்துவிடுகின்றன. அனைத்திலிருந்தும் மீண்டு பழைய பன்னீர்செல்வமாய் வரவேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார் சிம்பு. ஒரு வழியாக எல்லா தடைகளையும் தாண்டி ரிலீஸானாலும் சிம்புவின் மாநாடு படத்துக்கு சிக்கல் குறையவில்லை. டிவி சாட்டிலைட் உரிமை விற்பனை தொடர்பாக இப்போது புதிய புயல் கிளம்பியுள்ளதாக கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் இந்தமுறை அவர் யாருடன் மோதுகிறார் என்பதால் தான்.

முதலில் மாநாடு படத்தை ஒடிடி தளங்களுக்கு விற்றால் மிக அதிக லாபம் கிடைக்கும் என்று பலரும் பல வாய்ப்புகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு கொடுத்துள்ளனர். சிம்புவுக்கு நல்ல மார்கெட் இருந்தும், ஒடிடி வேண்டாம், படம் கண்டிப்பாக நன்றாக ஓடும், தியேட்டரில் தான் வெளியிடுவேன் என்று திடமாக நின்றுள்ளார் சுரேஷ் காமாட்சி. ஒவ்வொரு படத்துக்கும் டிவி சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமம் என்பது முக்கியமான வியாபார அம்சம். மாநாடு படத்தை விஜய் டிவி முதலில் விலை பேசியுள்ளது. ஆனால் சுரேஷ் காமாட்சி சொன்ன விலை மிக அதிகம் என்று விஜய் டிவி படத்தை வாங்காமல் விட்டுவிட்டதாம். எனவே ரிலீஸுக்குப் பிறகு சாட்டிலைட் உரிமத்தை விற்கலாம். படம் ஹிட் ஆகிவிட்டால் நாம் சொன்ன விலையைத் தருவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருந்துள்ளார் தயாரிப்பாளர்.

ஆனால் ரிலீஸ் சமயத்தில் அவர் எதிர்பார்க்காத பல சிக்கல்கள் முளைத்துள்ளன. படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தவர்கள் தரப்பிலிருந்து அனுமதி கொடுத்தால் தான் படம் தியேட்டரில் ரிலீஸாவதற்கான கெ.டி.எம் எனப்படும் தியேட்டர் ஒளிபரப்பு பாஸ்வேர்டை பெறமுடியும். இதில் தான் சிக்கல் வந்துள்ளது. பணம் கேட்டு ஃபைனான்ஸ் தரப்பிலிருந்து நெருக்கடி வரவே படம் இன்று ரிலீஸாகுமா என்பதில் சிக்கல் வந்துள்ளது. இந்த நேரத்தில் தான் உதயநிதியிடமிருந்து அழைப்பு வந்ததாக சொல்கிறார்கள். உடனடியாக பணம் தேவை என்பதால் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கும் பட்சத்தில் அதற்கான பணத்தை தருவதாக வியாபாரம் பேசப்பட்டுள்ளது. படத்திற்கு கலைஞர் டிவி சார்பில் 6 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாகவும் தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. இது சுரேஷ் காமாட்சி எதிர்பார்த்த விலையை விட குறைவு என்றாலும், கடைசி நேர நெருக்கடியில் அவருக்கு வேறு வழியில்லாமல் போனதாம். படத்தை ரிலீஸ் செய்ய பணம் தேவை என்பதால் 6 கோடிக்கு அவர் சம்மதித்து படத்தை கலைஞர் டிவிக்கு கொடுக்க சம்மதித்துள்ளாராம்.

ஆனால் இப்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தரப்பிலிருந்து சுரேஷ் மாகாட்சியிடம் புதிய பஞ்சாயத்து பேசுகிறார்களாம். சிம்புவின் படத்துக்கு மார்கெட் விலை அதிகம், அதை 6 கோடிக்கு குடுத்தால் எப்படி என்று கேட்கிறாராம் டி.ஆர். நெருக்கடி என்று இந்த விலைக்கு கொடுத்துவிட்டால் அடுத்த படம் வரும் போது இதைக் குறிப்பிட்டு குறைந்த விலைக்கே கேட்பார்கள் என்று டி.ஆர் கூறியுள்ளார். எனவே தான் கலைஞர் டிவி சார்பாக உதயநிதி கொடுத்த 6 கோடியை நான் கொடுக்கும் பணத்தை வைத்து திரும்ப கொடுத்துவிடுங்கள், சாட்டிலைட் உரிமையை நான் விற்றுக் கொள்கிறேன் என்கிறாராம் டி.ராஜேந்தர். இவர் சொல்வதைக் கேட்டு இப்போதைய சூழலில் கலைஞர் டிவியை பகைத்துக் கொள்வதா? பல பிரச்சனைகளில் கூட நின்ற டி.ராஜேந்தருக்கு நோ சொல்வதா? என்று தவிக்கிறாராம் சுரேஷ் காமாட்சி. “காசிக்குப் போனாலும் கர்மம் தொலையவில்லையே” என்று பழமொழி சொல்வதைப் போல, மாநாடு படம் ரிலீஸானாலும் சர்ச்சை குறையவில்லை.

click me!