பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானின் வீட்டு பெயர் பலகையில் வைரக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கிறது. இதை வீடியோவாக எடுத்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மும்பையில் இருக்கும் மன்னத் வீடு மிகவும் பிரபலமானது. அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் இரவே ரசிகர்கள் அவரது வீடு முன்பு குவிந்து விடுவது வழக்கம். இதேபோல் புதிய படங்கள் வெளியானால், படங்கள் நன்றாக ஓடினால் அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் குவிந்து விடுவார்கள். அப்போதெல்லாம், தனது இளைய மகன் ஆப்ராம் உடன் வந்து ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஷாரூக்கான்.
இவரது வீடு மன்னத் என்று அழைக்கப்படுகிறது. முன்பு இவரது வீட்டு பெயர் பலகை கருப்பு வர்ணத்தில் முன்பு இருந்தது. இதை நீக்கிவிட்டு, கடந்த ஏப்ரல் மாதம் இவரது வீட்டுக்கு வெளியே இருபுறமும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட பெயர் பலகை அமைக்கப்பட்டது. ''மன்னத் லேண்ட்ஸ் என்ட்'' என்று ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பாதிக்கப்பட்டு, அவற்றை சுற்றி வைரக்கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன. ஆனால், இவற்றில் சில கற்கள் விழுந்துவிடவே, அந்த பெயர் பலகை நீக்கப்பட்டது.
சமீபத்தில், பழுது செய்யப்பட்ட பின்னர் மீண்டும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பெயர் பலகையில் அமைக்கப்பட்டு இருக்கும் வைரக் கற்களின் மதிப்பு ரூ. 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? கிங் கானின் வீடு, எவ்வாறு பகலிலும், இரவிலும் வைரத்தில் ஜொலிக்கிறது பாருங்கள் என்று பெயர் பலகையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
மன்னத் வீட்டு பெயர் பலகைக்கு டிசைன் செய்து இருப்பது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் என்று கூறப்படுகிறது. பொதுவாக வீட்டு விஷயங்களில் ஷாருக்கான் எந்த முடிவும் எடுப்பதில்லையாம். கௌரி எடுக்கும் முடிவை குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்வார்களாம். இவரது குடும்பத்தினர் போலவே ஷாருக்கானின் ரசிகர்களும் பெயர் பலகையை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இதில் இருக்கும் விஷயமே மீண்டும் ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்த சில வாரங்களிலேயே அந்தப் பெயர் பலகையை நீக்கி விட்டனர். மீண்டும் பெயர் பலகையில் இருந்து ஒரு வைரக் கல் கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பெயர் பலகை வீட்டுக்குள் வைக்கப்பட்டு, அதே போன்ற வேறு பெயர் பலகை வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பழுது பார்த்த பின்னர் மீண்டும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட பலகை வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.