
1990களில் தமிழகத்தையே அச்சுறுத்திய ஒரு வடநாட்டு கொள்ளைக்கூட்டத்தை தமிழக அதிகாரிகள் அயராது உழைத்து தேடிப் பிடிக்க முயன்ற உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பரபரப்பான ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். கொள்ளை நடக்கும் வீடுகளில் இருப்பவர்களை கொடூரமாக அடித்துக் கொல்லும் ஒரே மாதிரியான கொலைகள் மற்றும் குற்றவாளிகளின் கைரேகையைத் தவிர வேறு எந்த தடயங்களுமே இல்லாத நிலையில், தமிழக காவல் அதிகாரிகள் "ஆபரேஷன் பவாரியா" என்று ஒரு குழு அமைத்து சுமார் 10 மாதங்கள் கஷ்டப்பட்டு 13 பேரை கைது செய்து இருவரை என்கவுண்டர் செய்தது.
‘பவாரியா’ என்பது பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடி இனமாகும். இந்த இனம், ஆங்கிலேய அரசின் குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டதாகும் இதனால் `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் குற்றப்பரம்பரையினர் என்று வரும் வசனங்களையும் அதைக் குறிக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டுமென்று நேற்று மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து முன்னணி வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "பிறப்பின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் குற்றப்பரம்பரையாகச் சித்திரிக்கும் வகையில், காட்சிகளும் வசனங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இது, சட்டப்படி குற்றமாகும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து வீரமுடன் போராடியவர்களை ஒடுக்குவதற்காகவும் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தவும், குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரை என அடையாளப்படுத்திவந்தனர். இது ஒரு கொடுமையான விஷயம் என்று பல தலைவர்கள் போராட்டம் நடத்தி, குற்றப்பரம்பரைச் சட்டத்தை அப்புறப்படுத்தினர்.
அதன்பின்பு, சுதந்திர இந்தியாவில் குற்றப்பரம்பரையாகக் கொடுமைப்படுத்தப்பட்ட மக்கள், கல்வி, வேலை வாய்ப்பில் பங்குபெறும் வகையில் சீர்மரபினராக அறிவிக்கப்பட்டனர். குற்றப்பரம்பரை என்ற வார்த்தையை அந்தச் சமூகத்தின்மீது பயன்படுத்தக்கூடாது என்று ஐ.நா மன்றமே உத்தரவிட்டு இந்திய அரசுக்கு அனுப்பியது.
இந்தியாவில் குற்றப்பரம்பரையாகக் கருதப்பட 200-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் உள்ள ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில், `தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் காட்சிகளும் வசனங்களும் வைக்கப்பட்டுள்ளன. பிறப்பால் ஒருவன் குற்றவாளியாகிறான் என்று சித்திரிப்பது, சமூக அநீதியாகும். இப்படி ஒரு புரிதல் இல்லாமல் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்த செயலை ஊடகங்களும் பாராட்டி எழுதுகின்றன.
அனைத்து சாதியிலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள். அதனால், இப்படத்தில் குற்றப்பரம்பரையினர் என்று வரும் வசனங்களையும் அதைக் குறிக்கும் காட்சிகளையும் நீக்க வேண்டுமென்று படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தற்போது கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், உயர் நீதிமன்றத்துக்கு செல்வோம்" என கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.