தமிழகத்தில் கன்னட படங்களை ஓடாமல் செய்ய வைக்க முடியும் - சீமான் ஆவேசம்

Published : May 29, 2025, 12:33 PM ISTUpdated : May 29, 2025, 12:36 PM IST
Kamal and Seeman

சுருக்கம்

'தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று பேருண்மையை கூறியதற்காக கன்னட அமைப்புகள் கமலை மிரட்டி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும், தக் லைஃப் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்து அவமதிப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? அதிலும் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நாமெல்லாம் சகோதர மக்கள் எனும் பொருள்படும்படியாகவே அக்கருத்தினை அந்த இடத்தில் தெரிவித்திருந்ததை, அவரது பேச்சை முழுமையாக உள்வாங்கும் அனைவராலும் எளிதாக உணர முடியும்.

ஆனால், தமிழ்மொழி தோன்றி வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும். தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிபுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும்!

அதையெல்லாம் விடுத்து, அண்ணன் கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? தமிழ் படங்கள்தான் கர்நாடாகவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா? அண்ணன் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை அங்கே திரையிட அனுமதிக்காவிட்டால், ஒரு கன்னட திரைப்படத்தைக்கூட தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று பதிலுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஆக்கப்பூர்வமானச் செயலாக இருக்குமா? காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? இன்னமும் அந்த நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழர்கள் அதனை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்? கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அத்தகைய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு ஏன் இல்லை?

ஒருவேளை தமிழர்கள் அறச்சீற்றம் கொண்டு அப்படங்களை எல்லாம் தடுக்க முனைந்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னடப் படத்தைக்கூட திரையிட முடியாதச் சூழலை ஏற்படுத்த முடியும். அவற்றைத்தான் கன்னடவெறி அமைப்புகள் விரும்புகின்றனவா? அப்படி ஒரு எதிர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தமிழர்களை கன்னட அமைப்புகள் தள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழ்நாடு அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்துபோகக்கூடாது.

உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார். ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அண்ணன் கமல்ஹாசன் அவர்களை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள். எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசு அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள் மிக நன்றாக அறிவார்கள்; அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதன் மூலம், இரு மாநில மக்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்கும் செயல்களில் இனியும் கன்னட அமைப்புகள் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, கர்நாடக மாநில அரசு, கன்னட அமைப்புகளின் வீணான வெறிச்செயலுக்கு தூபம் போடுவதை விடுத்து, இரு மாநில மக்களின் நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் அண்ணன் கமல்ஹாசன் அவர்களையும், தக் லைஃப் திரைப்பட குழுவையும் மிரட்டும் அடவாடிச் செயல்களில் ஈடுபடும் கன்னடவெறி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தக் லைஃப் திரைப்படத்தைத் தக்க நேரத்தில் திரையிட உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கார்த்திக் மற்றும் ரேவதி எப்போது ஒன்று சேர்வார்களா? கார்த்திகை தீபம் 2 சீரியல் அப்டேட்!
மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!