GuluGulu : சந்தானம் ஹீரோவாக நடிக்கும் குலு குலு என்கிற படத்தை இயக்க உள்ளார் ரத்னகுமார். இப்படத்தில் நடிகர் சந்தானம் உலகம் சுற்றும் வாலிபனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஹிட்டான மேயாதமான்
மேயாதமான் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்ன குமார். வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா நடிப்பில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.
ஆடையால் ஏற்பட்ட பரபரப்பு
இதையடுத்து அமலா பால் உடன் கூட்டணி அமைத்த ரத்னகுமார், அவரை வைத்து ஆடை படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகை அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
லோகேஷுடன் கூட்டணி
இதன்பின்னர் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்த ரத்னகுமார், அவர் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் டயலாக் ரைட்டராக பணியாற்றினார். இதுதவிர தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்திற்கு அவர் வசனகர்த்தாவாக பணியாற்றி வருகிறார்.
சந்தானத்தின் குலு குலு
இந்நிலையில், இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்ததாக சந்தானம் ஹீரோவாக நடிக்கும் குலு குலு என்கிற படத்தை இயக்க உள்ளார் ரத்னகுமார். இப்படத்தில் நடிகர் சந்தானம் உலகம் சுற்றும் வாலிபனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
போஸ்டர் சர்ச்சை
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், கவுதம் மேனன் ஆகியோர் வெளியிட்டனர். அதில் இடம்பெற்றுள்ள சந்தானத்தின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள், இது அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா கெட் அப் ஆச்சே என விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... https://tamil.asianetnews.com/cinema/bharath-to-romance-this-popular-actress-in-his-50th-project-r8vhsd