”அண்ணாத்த வந்தப்போ கொரோனா கட்டுக்குள் இருந்துச்சா?”.. சன் பிக்சர்ஸுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி...

By Kanmani PFirst Published Nov 23, 2021, 1:14 PM IST
Highlights

அண்ணாத்தே படம் வெளிவந்த போது கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது கட்டவிழ்ந்து விட்டதா? சன் பிக்சர், ரெட் ஜயண்ட் படங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா?  என அனல் பறக்கும் கேள்விகளை தயாரிப்பாளர் கஸாலி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வர முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தியது தான். இந்த பணியை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. அவ்வப்போது பெரிய அளவில் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இதுவரை நமது மாநிலத்தில் 6 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருந்தும் பலர் தடுப்பூசி குறித்த நேர்மறை எண்ணங்களால் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் வராமலேயே இருந்து வருகின்றனர்.  இதை சரி செய்ய பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அரசு. அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கடை நடத்துபவர்கள் மற்றும் ஊழியர்கள் என மக்களை சந்திக்கும் பணியில் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த அரசு ; திரையரங்கு போன்ற மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என அறிவித்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல படங்கள் ரிலீஸாகாமல் தேங்கி கிடக்கின்றன. 'மாநாடு' போன்ற பிரபலத்தின் படங்கள் கூட ரிலீசுக்கு மாதக்கணக்கில் காத்திருக்கிறது. இதற்கிடையே ஓடிடி தளங்களால் பெருத்த நஷ்டத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மேலும் இடியாக வந்திறங்கியுள்ளது.

இது குறித்து நேற்று 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, போட்டுள்ள ட்வீட்டில் "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!". என தெரிவித்திருந்தார்.

 

உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! https://t.co/UI7l5DpNKQ

— sureshkamatchi (@sureshkamatchi)

 

இதை தொடர்ந்து இயக்குனரும்  தயாரிப்பாளருமான கஸாலி; தயாரிப்பாளர்கள் சங்க வாட்சப் குரூப்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்; அண்ணாத்தே படம் வெளிவந்தபோது கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது கட்டவிழ்ந்து விட்டதா? சன் பிக்சர், ரெட் ஜயண்ட் படங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா?  என அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதில்;

சில கேள்விகள் எழுகின்றன:

1. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென வந்திருக்கும் அறிவிப்புக்குக் காரணம் என்ன? 
தினசரி தொற்று திடீரென உயர ஆரம்பித்து விட்டதா அல்லது வேறு எதுவும் உள் நோக்கமா? 

2. அண்ணாத்தே படம் வெளிவந்தபோது கட்டுக்குள் இருந்த கொரோனா இப்போது கட்டவிழ்ந்து விட்டதா? 
சன் பிக்சர், ரெட் ஜயண்ட் படங்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதியா? 

3. முக்கியமாக தியேட்டர்களுக்கு வேக்சின் சான்றிதழை எப்படிக் கொண்டு வர முடியும்? 
இன்று வடபழனி பலாஸோவில் பொது மக்களுக்கும், பலாஸோ நி்வாகிகளுக்குமிடையில் பெரிய தகராறு நடந்தது. 

4. அரசியல் கூட்டங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு வேக்சின் சான்றிதழ் தேவையில்லையா? அல்லது அவையெல்லாம் கொரோனா எட்டிப் பார்க்காத பகுதிகளா? 

5. டாக்டர் படத்திற்கு 50% பார்வையாளர்கள் அனுமதி. ஆனால், அண்ணாத்தே படத்திற்கு 100% அனுமதி. 
இப்போது அந்த 100% அனுமதியை ரத்து செய்ய முடியாது என்பதால் வேக்சின் சான்றிதழ் வலியுறுத்தலா? 

திமுகவின் இப்போதைய ஆட்சி நன்றாக இருக்கிறது என்பது பரவலான கருத்து. 
ஆனால், சினிமாவைக் கையாளும் அல்லது கட்டுப்படுத்தும் அவசரத்தில் முந்தைய திமுக ஆட்சிபோல கெட்ட பெயர் எடுக்கப் போகிறதா ஆளும் திமுக?  

சினிமாக்காரர்கள் எப்போதுமே கொஞ்சம் அடங்கிப் போகும் தன்மை கொண்டவர்கள். கோழைகள் அல்ல. காரணம், வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற எச்சரிக்கையும் சுயநலமும்! ஆனால், நேரம் கிடைக்கும் போது வச்சு செய்வதில் வல்லவர்கள். யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். 

தேவையில்லாமல் சினிமாவைச் சீண்டுவது அவர்களுக்கு நல்லதல்ல. உண்மையிலேயே அக்கறை இருந்தால் முதலில் டாஸ்மாக்கிலும், அரசுக் கூட்டங்களிலும் அமுல்படுத்தட்டும். 

ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் சினிமாத் தொழிலின் நிர்வாகங்களில் இருக்கும்வரை இதுபோன்ற அவலத்திற்குத் தீர்வு கிடைக்காது. என பல கேள்விகளை  வைத்துள்ளார். இவரின் கேள்விகள் இன்று தயாரிப்பாளர்களிடையே விவாத பொருளாக மாறியுள்ளது பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பான "அண்ணாத்த" கடந்த தீபாவளியன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி பல கோடி லாபத்தை தயாரிப்பு நிறுவனத்திற்கு ஈட்டி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
  
இவரை தொடர்ந்து எதிர்ப்பு ட்வீட்டை ஷேர் செய்ததன் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் கங்கை அமரன். அந்த ட்வீட் பதிவில் ; "தடுப்பூசி போட்டவனுக்கு மட்டும் தான் சரக்குனு சொல்லுங்க, பேருந்தில், ரயிலில் பயணிக்க தடுப்பூசி அவசியம்னு சொல்லுங்க, அதென்ன தியேட்டருக்கு வருபவனுக்கு மட்டும் தடுப்பூசி அவசியம்" என காரசார கேள்விகள் அடுக்கப்பட்டுள்ளது.

 

என்ன கொடுமை சார் இது ? pic.twitter.com/xvvCcNZ1WB

— gangaiamaren@me.com (@gangaiamaren)

 

இவ்வாறு அரசின் இந்த உத்தரவை திரை துறையினர் மிக பின்னடைவாகவே கருதுவதாக தெரிகிறது. வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகள், மதுபான கூடங்கள், உணவகங்கள், மால்கள் போன்ற இடத்திற்கு வரும் கூட்டத்திற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காத நிலையில் திரை துறையினரை பழிவாங்கும் விதமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சினிமா வட்டாரம் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். திருவிழா காலங்களில் திநகர் போன்ற வணிக இடங்களில் கூடும் கூட்டத்தை விடவா அதிக கூட்டம் திரையரங்கிற்கு வர போகிறது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு பொது இடங்களுக்கு வரும் மக்கள் தடுப்பூசி போடுவது கட்டாயம் என கூறப்படாத நிலையில் திரையரங்கிற்கு தடுப்பூசி செலுத்தாமல் வந்தால் கொரோனா பரவும் என சொல்வது சரியா என திரைத்துறையினர் கேள்வி எழுப்புவதில் அடிப்படை நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. 

click me!