விஷால் பதுக்க நினைக்கும் திருட்டு தஸ்தாவேஜ்கள்...வெட்டவெளிச்சமாக்கும் தயாரிப்பாளர்...

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 11:38 AM IST
Highlights

பாதிபேர் ராஜினாமா செய்துவிட்டபின் அதில் இருப்பது குறைந்த பட்சம்தானே?இந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.பொதுக்குழு முறையாக நடக்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தமக்கு வேண்டியவர்களை வைத்துக்கொண்டு செயற்குழுவில் நிறைவேற்றும் நிர்வாகம் முறையற்ற நிர்வாகம்தானே?

’தான் நேர்மையானவர் என வார்த்தைக்கு வார்த்தை பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பும் விசால் அந்த நேர்மையை தயாரிப்பாளர்கள் முன் பொதுக்குழுவாக வெட்ட வெளிச்சமாக்காதது ஏன்?' என்று விஷாலை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

விஷால் எதிரணியில் மிகத் தீவிரமாக இயங்கிவரும் தயாரிப்பாளர்களுல் ஒருவரான சுரேஷ் காமாட்சி சற்றுமுன்னர் அனுப்பியுள்ள அறிக்கையில்...

...தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டிவிட்டோம் என 27 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது திரு விசால் தலைமையிலான குறைந்த பட்ச செயற்குழு.

பாதிபேர் ராஜினாமா செய்துவிட்டபின் அதில் இருப்பது குறைந்த பட்சம்தானே?இந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.பொதுக்குழு முறையாக நடக்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தமக்கு வேண்டியவர்களை வைத்துக்கொண்டு செயற்குழுவில் நிறைவேற்றும் நிர்வாகம் முறையற்ற நிர்வாகம்தானே?

எல்லா காலங்களிலும் வெற்றி பெற்ற அணிக்கு எதிரணி இருக்கவே செய்யும். ஆனால் விசாலைப் பொருத்தவரை நடிகர் சங்கமாகட்டும் தயாரிப்பாளர் சங்கமாகட்டும் அது எதிரணி அல்ல. எதிரி அணி. தன் தவறுகளின் மீது விமர்சனம் செய்பவர்கள்... தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கெதிராக போராடுபவர்கள் இவரைப் பொருத்தவரை எதிரிகள்.

அவர்களை நீக்குவார். அல்லது இந்த மாதிரி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்புவார். ஆனால் தனது அடிப்படைத் தவறுகளை புரிந்துகொள்ள மாட்டார். பொதுக்குழு நடத்தப்படாத, நான்கு செயற்குழு மீட்டிங்கிற்கு வராத தலைவர் உள்ள நிர்வாகம் முறையாக நடைபெறும் நிர்வாகமா?

முறையாக தேர்தல் நடத்தப்பட வேண்டிய நேரத்தில் பொதுக்குழு அனுமதியின்றி துணைத்தலைவராக திரு பார்த்திபன் அவர்களைத் தேர்வு செய்தது ஏன்? திரு பார்த்திபன் அவர்கள் நியாயம் பேசுபவர். இந்தப் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றால் அனைத்து தயாரிப்பாளர்களும் ஓட்டுப் போட்டே தேர்வு செய்திருப்பார்களே? ஏன் குறுக்கு வழியில் வந்திருக்க வேண்டும்? இது முறைப்படி நடந்திருக்கிறதா?

இரண்டு ஆண்டுகாலத்தில் உறுப்பினர்களுக்கு எந்த டிரான்பரன்சியும் இல்லாத நிர்வாகம் எப்படி முறையான நிர்வாகமாக இருக்கமுடியும்? சிலர் கேட்கிறார்கள் ..அவருக்கு செயல்பட நேரம் கொடுங்கள் என்று.. அய்யா நாங்கள் சொல்லவில்லை ஒரு வருடத்திற்குள் எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். அப்படியில்லையென்றால் ராஜினாமா செய்வோம் என்று அவர்களாகவேதான் சொன்னார்கள்.

க்யூப், தியேட்டர்கள் ஒழுங்கு முறை, நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் சம்பள விகிதம், டிக்கெட் கட்டண குறைப்பு, திரைப்பட வெளியீடு ஒழுங்குபடுத்துதல், இப்படி எல்லா விசயத்திலும் தோற்றுப் போன நிர்வாகம் செயல்படுவதை எதிர்த்து உறுப்பினர்கள் போராடத்தான் செய்வார்கள்.

இப்படி தோற்றுப்போன ஒரு நிர்வாகம் கண்துடைப்பிற்காக நடத்தும் விழாதான் இளையராஜா அவர்களின் நிகழ்ச்சி. அதாவது கடந்த தாணு அண்ணன் அவர்களின் பதவிக் காலத்தில் பேசி இளையராஜா அய்யா அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்ட நிகழ்ச்சியை தான் சாதித்த மாதிரி காட்டிக்கொள்ள நடத்தும் கண்துடைப்பு நாடகமாக, அடுத்த தேர்தலில் சாதித்ததாக காட்டிக்கொள்ள நடக்கும் விழாவாக மட்டுமே இதைப் பார்க்க முடிகிறது.

ஒரு ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தை இன்னொரு ஆட்சியில் திறந்து வைத்து பெருமைப்பட்டுக்கொள்வதைப் போல இதுவும் ஒரு தோற்றுப்போன நிர்வாகத்தின் பூசி மெழுகும் நிகழ்வே.

ஏன் நாங்கள் இந்த நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பே கொடுக்கவில்லையா? பல அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி படப்பிடிப்பை நிறுத்தின போது ஒன்றாகத்தானே நின்றோம்.. ஒருசில படங்கள் ஷுட்டிங் நடைபெற்றபோதுகூட பரவாயில்லை ஏதோ விடிவுகாலம் பொறக்கப்போகுதுபோல எனக் காத்திருந்தோமே...

என்ன செய்தீர்கள்? அத்தனைமாத போராட்டத்தில் போராடிய அத்தனைக்கும் எதிரான விளைவுகளே இங்கு நடந்தது. இப்படி எல்லாவற்றிலும் தவறாக முறையற்று நடந்தபின்னும் போராட்டம் செய்தவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பூட்டவில்லை என்பதுதான் உண்மை. ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பூட்டப்படவில்லை.

அது திறந்தேதான் இருந்தது. பொதுக்குழு அனுமதியின்றி... தனது வசதிக்காக.. எடுக்கப்பட்ட முறையற்ற அலுவலகம்தான் பூட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகால தயாரிப்பாளர்கள் சங்க சரித்திரத்தில் தனியாக ஒரு அலுவலகம் செயல்பட்டதே இல்லை.

சங்கத்தில் உறுப்பினர்கள் போக வர இருப்பார்கள். அலுவல்கள் அண்ணாசாலை அலுவலகத்திலேயே நடக்கும். நிர்வாகிகள் எதிர் அறைகளில் இருப்பார்கள். உறுப்பினர்கள் அலுவலக வேலையை முடித்துவிட்டு எதிர் அறையில் உள்ள நிர்வாகத்திடம் தேவைகளை சொல்லிவிட்டு நகர்வார்கள். அப்படித்தான் இயங்கிக்கொண்டிருந்தது.

இதோ நடிகர்களும்.. பிரபல இயக்குநர்களும் சங்க நிர்வாகிகளான பின் தங்களை ஒளித்துவைத்துக் கொள்ள அலுவலக வேலைகளுக்காக தி நகரில் ஏற்படுத்தப்பட்ட வாடகை வீடு அது. அது ரெஜிஸ்டர் செய்யப்பட்ட முகவரி உள்ள தயாரிப்பாளர்கள் சங்கமல்ல. தன்னையும் பின் வரவு செலவு கணக்குகளையும் ஒளித்துவைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட வீட்டைத்தான் உறுப்பினர்கள் தங்கள் சங்க செயல்பாடுகளின் அதிருப்தியை வெளிக்காட்ட மூடினார்கள்.

இதை தயாரிப்பாளர்கள் சங்கத்தை மூடிவிட்டதாக விளம்பரம் செய்துகொண்டார்கள். இப்போது 27 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். நடிகர் சங்க உறுப்பினர்களை வெளியேற்றிய அதே சர்வாதிகார பாணி... தயாரிப்பாளர்களுக்கும் முனை நீட்டப்பட்டுள்ளது.

முறைப்படி தேர்தலை சந்தித்து.. கணக்கு வழக்குகளை ஒப்படைத்து .. பொதுக்குழுவை நடத்த முடியாத முறையற்ற நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர...தங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதாக... மறுக்கப்படுவதாக போராடும் உறுப்பினர்கள் அல்ல.

தான் நேர்மையானவர் என வார்த்தைக்கு வார்த்தை பத்திரிகைகளுக்கு அறிக்கை அனுப்பும் விசால் அந்த நேர்மையை தயாரிப்பாளர்கள் முன் பொதுக்குழுவாக வெட்ட வெளிச்சமாக்காதது ஏன்? DR வந்து அறையை சீல் வைக்கும்போது இந்த நேர்மையானவர்கள் சில தஸ்தாவேஜ்களை பக்ககத்து வீட்டில் தூக்கி எறிந்தது ஏன்? உண்மையானவர்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும். அந்த தஸ்தாவேஜ்கள் தற்போது காவல்துறை வசம் சேர்க்கப்பட்டிருப்பதாக கேள்விப்படுகிறோம். அந்த உண்மைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வரவேண்டும். அப்போது தெரியும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து உங்களுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்புவார்கள்.

எல்லா உறுப்பினர்களையும் அரவணைத்து... குறைகள் கேட்டு நிவிர்த்தி செய்து.. எதிரணியினரை உட்கார வைத்து பேசி சமரசம் செய்துகொண்டு அவர்கள் சொல்லும் குறைகளை செவிமடுத்துப் போகும் ஒரு தலைமைப் பண்பற்ற ஒருவர் கீழ் இன்னும் உறுப்பினர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ??

click me!