பிரபல தயாரிப்பாளரும் - குணச்சித்திர நடிகருமான தேனப்பனின் தாயார் சரஸ்வதி ஆச்சி என்பவர், வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
சிறு வயதில் இருந்தே பல கஷ்டங்களை கடந்து... தன்னை தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராகவும் - தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்தி கொண்டவர் பி.எல்.தேனப்பன். இவர் காரைக்குடியை சேர்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே அவரின் தந்தை கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதால் இவர் கேரளாவில் தான் படிக்கும் சூழல் நிலவியது.
பின்னர் அந்த நிறுவனம் சூழ்நிலை காரணமாக மூடப்பட்டதால், வேலையில் அமர்த்தப்பட்ட அனைவருமே வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே இவரின் தந்தை சென்னைக்கு வேலை தேடி சென்றார். சரியான வேலை அமையாததால், மிகவும் கஷ்டப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டது தேனப்பனின் குடும்பம். பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு குடும்ப சுமையை குறைக்க கேரளாவில் அவர் அப்பா அடிக்கடி செல்லும் ஒயின் ஷாப்பில் 5 ரூபாய் சம்பளத்திற்கு டேபிள் துடைக்கும் வேலை சேர்ந்தார். பின்னர் சினிமாவில் உள்ள ராமநாராயணன் இவரின் உறவினர் என்பதால் அவரிடம் வேலைக்கு சேர்ந்தார்.
பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் நேர்மையும் கடின உழைப்பும் இவரை ஒரு தயாரிப்பாளராக உயர்த்தியது. மேலும் ஒரு சில படங்களில், தேனப்பன் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். ‛ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி பல வெற்றி படங்களையும் தயாரித்துள்ளார். 1998ல் கமல்ஹாசன், பிரபுதேவா நடிப்பில் வெளியான ‛காதலா காதலா' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து ‛பம்மல் கே. சம்மந்தம், பஞ்சதந்திரம், திவான், பிரியசகி, வல்லவன், துரை, அய்யனார், பேரன்பு' போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இவரின் தாயார் சரஸ்வதி ஆச்சி கடந்த சில வருடங்களாகவே... உடல்நிலை குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் அவதி பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இவரின் மறைவு ஒட்டுமொத்த குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தேனப்பனின் தாயாரின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.