அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் பொணந்தின்னியாக நடித்து பிரபலமடைந்த நடிகர் செவ்வாழை ராசு இன்று காலமானார்.
அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் பருத்திவீரன். கார்த்தி நாயகனாக அறிமுகமான படமும் இதுதான். மதுரையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் நடித்திருந்த பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள் தான். அவர்களுக்கு அடையாளமாக மாறியது இப்படம் தான். அந்த வகையில் பருத்திவீரன் திரைப்படத்தில் பொணந்தின்னியாக நடித்திருந்த செவ்வாழை ராசுவுக்கும் இப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இவர் பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே, பிரபு சாலமனின் மைனா மற்றும் விக்ரம் நடித்த கந்தசாமி என பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் செவ்வாழை ராசு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... காதலின் 6 அத்தியாயங்கள்... மனதை மயக்கியதா ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர்? - முழு விமர்சனம் இதோ
இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செவ்வாழை ராசுவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்தில் செவ்வாழை ராசுவின் இறுதி சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த நடிகர் செவ்வாழை ராசுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தமிழ் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகர்களான டிபி கஜேந்திரன், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் அடுத்தடுத்த மரணமடைந்த நிலையில், தற்போது செவ்வாழை ராசுவின் மறைவும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் சிவன் குறித்து எழுந்த சர்ச்சை கேள்விக்கு... அன்றே சத்குரு அளித்த சாமர்த்திய பதில்