வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?
திரைப்பாடல் - அழகும் ஆழமும்-5 நேற்று நடந்தது இன்று மாறலாம்.
அரை நூற்றாண்டுக்கு முன்பு, தமிழ்த் திரையுலகம், உண்மையிலேயே கலைகளின் பிறப்பிடமாக இருந்தது. அதிலும் நடிப்புக் கலைக்கு ஒரு பல்கலைக்கழகம், தமிழ்த் திரையைத்தான் தலைமை இடமாய்க் கொண்டு இருந்தது. 'இவர் என்ன செஞ்சாலும் ரசிக்கலாம்..' என்று மக்கள் அவரின் சிரிப்பை, அழுகையை, நடையை, நளினத்தை அணுவணுவாக ரசித்துக் கொண்டாடினர். (என்னைப் போன்ற) பாமரர்களின் ரசனைத் திறனை, வெகுவாக உயர்த்தியதில் அவரது பங்களிப்பு அபாரமானது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன். பிற்பாடு நான், மேடை நாடகம் எழுதி இயக்கி நடித்த போது, உடன் பயணித்த நண்பர்கள் ஒரு கேள்வி அடிக்கடி கேட்பார்கள். (நான் உட்பட எல்லாருமே மேடைக்குப் புதிது) கேள்வி என்பதை விட, நாங்கள் எதிர் கொண்ட பெரிய சவால் அது. 'சும்மா நிற்கறப்போ,... வசனம் பேசறப்போ, நடக்கிறப்போ... கையை எப்படி வச்சுக்கறது..?' எங்களுக்குத் தெரிஞ்ச 'ஈசி'யான வழி - பாண்ட் பாக்கெட்டுக்கு உள்ளே கயை நுழைச்சுக்குவோம். அப்போது எல்லாம் எங்களுக்கு 'ரெஃபரன்ஸ்' - பாடம் கற்றுக் கொடுத்தது- இந்தப் பாடல் காட்சி.
ரெயிலை ஒட்டி நடந்து செல்வார் சிவாஜி. என்ன ஒரு 'ஸ்டைல்'...! பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாட்டின் நிறைவில், 'நேற்று வரை நடந்ததெல்லாம்..' என்கிற சொற்கள் வரும் போது, ரெயிலுக்குள் இருக்கும் ஒருவரைப் பார்த்து, கைவிரலால் எச்சரிப்பார். அடடா... இப்படி, இயல்பான நடிப்புக்கு, காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்' பாத்திரத்தில் சிவாஜி அசத்தி இருப்பார். இப்பாடலைப் பார்க்கும் போதெல்லாம், பச்சை விளக்கு படத்தின் 'கேள்வி பிறந்தது அன்று..' பாடலும் நினைவுக்கு வரும். இரண்டுக்குமான ஒற்றுமையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். பாலாஜி - மணிமாலா; நாகேஷ் - மனோரமா ஆகியோர் இடையே மெல்லிய காதல் இழையோடுகிற காட்சிகள், பாடலை மேலும் ரசித்துப் பார்க்க வைக்கும்.
சேர்ந்து வாழ்தலில் உள்ள நன்மைகள்... அதற்கு வேண்டிய தன்மைகள்... எளிமையாக எடுத்துச் சொல்லும் இந்தப் பாடலை இயற்றியவர் - கவிஞர் வாலி. பொதுவாக எம்.ஜி.ஆருக்கான 'கொள்கைப் பாடல்கள்' இயற்றி வந்த கவிஞர், சிவாஜிக்காக எழுதிய 'தத்துவப் பாடல்'.
அதிகம் அறிந்திராத, அல்லது, பலரும் மறந்து போய் விட்ட பெயர் - ஆர். சுதர்சனம். இனிமையான பல பாடல்களைத் தந்தவர். அவற்றில் ஒன்று இது. 1965இல் வெளிவந்த, 'அன்புக் கரங்கள்' படத்துப் பாடல் வரிகள் - இதோ:
ஒன்னா இருக்கத் கத்துக்கணும் - இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்.
காக்காக் கூட்டத்தப் பாருங்க - அதுக்கு
கத்துக் குடுத்தது யாருங்க..?
வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம். - அந்த
நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா நல்லா இருக்கலாம்.
உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா..? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?
தன்னைப் போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே.. - அந்த
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே...
பொன்னைப் போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப் போல் மனிதன் வேறில்லை.
கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்.
நேற்று வரை நடந்த தெல்லாம் இன்று மாறலாம் - நாம்
நேர் வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இதையும் படியுங்கள்;
அத்தியாயம்-4:-