தனது குழந்தைகளுடன் ஒரு தாய் பாடுகிற இந்தப் பாடல், நெஞ்சை விட்டு அகலாத காட்சி அமைப்புடன் காதுகளில் ரீங்காரம் இடுகிறது; கண்முன் நிழலாடுகிறது.
திரைப்பாடல் - அழகும் ஆழமும்-25 : இதயம் வருடும் தாயின் கீதம்.
அவ்வப்போது சில அபூர்வ படைப்பாளிகள் தோன்றி, தமிழ்த் திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தி விடுகின்றனர். அரைத்த மாவையே அரைக்கிற மசாலாப் படங்களுக்கு மத்தியில் சுயமாக சிந்தித்து தரமான படைப்புகள் தருகிற ஆக்கபூர்வ படைப்பாளிகள் எண்ணிக்கையில் மிக சொற்பம். வீணை எஸ் பாலசந்தர், ஸ்ரீதர், ஆர்.சி. சக்தி, கே. பாலசந்தர், பாரதிராஜா என்று விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தப் பட்டியலில் தனி இடம் பிடிப்பவர் - இயக்குநர் மகேந்திரன். (இயற்பெயர் அலெக்சாண்டர்)
1960களின் தொடக்கம். இவர் படித்த கல்லூரியில் விழா. சிறப்பு விருந்தினர்- எம்.ஜி.ஆர். அவரது முன்னிலையிலேயே, மசாலா திரைப்படங்கள் குறித்து கடுமையாக விமர்சிக்கிறார் மகேந்திரன்.அதனைக் கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர்.,அவரை வெகுவாகப் பாராட்டி, பின்னாளில் சிறந்த விமர்சகராக வர, வாழ்த்துகிறார்.
கல்லூரிப் படிப்பை முடித்த மகேந்திரன் தொடர்ந்து, சென்னையில் பட்டம் படிக்க சேர்ந்தார்.பண வசதி இல்லாமல் சில மாதங்களில் நிறுத்திக் கொண்டார். இன முழக்கம் என்கிற பத்திரிகையில் பணிக்கு சேர்ந்தார். அப்போதுதான், எம்.ஜி.ஆரை மீண்டும் சந்திக்கிறார். அப்போது எம்ஜி.ஆர், கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை படமாக்க திட்டம் இட்டுக் கொண்டு இருந்தார்.அப்படத்தின் திரைக்கதை எழுதும் பொறுப்பை மகேந்திரனுக்கு வழங்கினார். படத் தயாரிப்பு பணிகள் தள்ளிக் கொண்டே போனதால், அவருக்கு தெரிந்த தயாரிப்பாளர் மூலம் கதாசிரியராக மகேந்திரனை அறிமுகப் படுத்தினார். அந்தப்படம் - ரவிச்சந்திரன் நடித்து, 1966இல் வெளியான நாம் மூவர்.
இதற்கு 12 ஆண்டுகள் கழித்து, 1978இல்தான், அவரின் இயக்குநர் கனவு நிறைவேறியது. படம் - ரஜினி நடித்த முள்ளும் மலரும்!நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி என்று பல தரமான படங்கள் இயக்கினாலும், மகேந்திரன் என்கிற அபூர்வ படைப்பாளியின் பெயர் சொல்லும் அற்புதமான படம் என்றால் அது - 1979இல் வெளியான 'உதிரிப்பூக்கள்'! புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கிற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கிச் செதுக்கி உருவாக்கப்பட்டது. படத்தின் முடிவில், முக்கிய வில்லன் (கதாநாயகன்) ஊர் மக்கள் முன்னிலையில் ஆற்றுக்குள் மூழ்குகிற காட்சி, இன்றளவும் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒன்று.
பல நிலைகளில் பல்வேறு விருதுகளை வென்ற உதிரிப்பூக்கள், 40 ஆண்டுகளைக் கடந்தும், இணையில்லாத தரத்துடன் முதல் இடத்தில் நிற்கிறது. தனது குழந்தைகளுடன் ஒரு தாய் பாடுகிற இந்தப் பாடல், நெஞ்சை விட்டு அகலாத காட்சி அமைப்புடன் காதுகளில் ரீங்காரம் இடுகிறது; கண்முன் நிழலாடுகிறது. பாடல் - கண்ணதாசன்; பாடியவர்- எஸ். ஜானகி. இசை: இசைஞானியாக வளர்ந்து கொண்டு இருந்த இளையராஜா!
இதோ அந்தப் பாடல் வரிகள்:
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ...
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா..
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்..
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது..
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படியுங்கள்:-
ஆணவத்துக்கு அடி பணியாதே... ஆமாஞ்சாமி போட்டு விடாதே..!