திரைப்பாடல் - அழகும் ஆழமும் -13. எது பெரிது..? சுயநலமா? பொதுநலமா?
இன்றைய தலைமுறை அறிந்திராத மூன்று மாமனிதர்களை ஒரு சேர ஒரே பாடலில் சந்திக்க இருக்கிறோம். இசை அமைப்பாளர் - தட்சிணாமூர்த்தி. பாடலாசிரியர் - மருதகாசி. பாடியவர் - கண்டசாலா (Ghantasala)
ஜெமினிகணேசன் - சாவித்திரி நடித்து 1957 இல், வெளியான படம் - 'யார் பையன்?'ஆதரவற்று நிற்கும் ஒரு சிறுவன். தனது பெற்றோரைக் கண்டுபிடிக்க முயல்கிறான். அவனது முயற்சி வென்றதா..? என்பதே கதை.
ஒரு கட்டத்தில், நாயகன் இந்தப் பிள்ளையை எடுத்து வளர்க்கிறான். அவன்தான் தனது தந்தை என்று சிறுவன் நம்புகிறான்.
இதனால் நாயகன் - நாயகி இடையே சந்தேகம், குழப்பம் ஏற்படுகிறது. மனக் கலக்கத்தில் விபரீத முடிவு எடுக்கிற நாயகன், பிள்ளையை காரில் வைத்துக் கொண்டு, அசுர வேகத்தில் பயணிக்கிறான். அப்போது, பின்னணியில் ஒலிக்கிறது இப்பாடல்.
இந்தக் காட்சியைப் பார்க்கிற யாருக்கும் ஒருகணம் மனம் பதைபதைக்கும்.
என்ன தத்துவம்...! என்னவொரு 'செய்தி'? எத்தனை அழுத்தம்..? என்னவோர் ஆழம்..? இசை அமைப்பாளர் எஸ். தக்ஷிணாமூர்த்தி. முழுப்பெயர் - சுசர்லா தட்ஷிணாமூர்த்தி சாஸ்திரி. ஹாலிவுட்' வரை சென்றவர். அபாரமான, வயலின் விற்பன்னர். இசைஞானி இளையராஜாவின் ஆத்மார்த்த குரு இவர்தான். இவரின் தந்தையார் சீனியர் தட்சிணாமூர்த்தி, கர்நாடக இசை மேதை ஸ்ரீ தியாகராஜர் அவர்களின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்.
பாடலாசிரியர் அ. மருதகாசி. நூற்றுக் கணக்கான படங்களில் ஆயிரக் கணக்கில் பாடல்கள் எழுதிக் குவித்தவர். இவரைப் பற்றி நிறையவேஇத்தொடரில் காண இருக்கிறோம். பாடகர் - கண்டசாலா. ஆந்திராவைச் சேர்ந்தவர்; அங்கே முன்னணி இசை அமைப்பாளராக20 ஆண்டுகளுக்கு மேல் புகழ் பெற்று விளங்கியவர். முக்கியமான குறிப்பு: 1942 வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தில் பங்கு கொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த தியாகி இவர். திரைத்துறைக்கு வருமுன்பு, ஆல் இந்தியா ரேடியோவில் நிலைய வித்வானாக இருந்தவர். இவரது குரல் அனாயாசமான தனித்தன்மை கொண்டது. கேட்டுப் பார்த்தால் தானே தெரியும்.
வாழ்க்கையில் எது பெரிது..? சுய நலமா..? பொது நலமா..? துன்பத்தை எதிர்கொள்ளாமல் எந்த இன்பமும் கைவராது.
என்னதான் இருந்தாலும் சுவையான மாங்கனி வேப்பங்காயாய் கசக்காது. இந்த உணமியை எண்ணிப் பார்க்கச் சொல்லும் இந்தப்பாடல் வரிகள் இதோ:
(குறிப்பு: ஆடியோவில் முழுப் பாடலும் கேட்கலாம். வீடியோ காட்சியில் குறைக்கப்பட்டு இருக்கலாம்.)
சுயநலம் பெரிதா
பொதுநலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை
தன்னை எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே... வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறித் தவிக்கும் மனிதா...
இந்த சொல்லின் உண்மை
தன்னை எண்ணிப் பாரடா
துன்பம் இல்லாமலே.. இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா?
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
இந்த சொல்லின் உண்மை
தன்னை எண்ணிப் பாரடா!
நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால்
அதைத் தெரு மீது வீணே எறிவதா
தென்றல் புயலாவதா உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை
தன்னை எண்ணிப் பாரடா!
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இதையும் படியுங்கள்
1.
மயக்கும் மாலை பொழுதே... அடடா! காலத்தை வென்று நிற்கும் கானம் அது..!
2.
கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!
3.
டி.எம்.எஸை பின்னுக்கு தள்ளிய கணீர் குரல்... கேட்பவர்களை சுண்டி இழுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி..!