தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..!

By Thiraviaraj RM  |  First Published Apr 10, 2020, 7:06 PM IST

மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, கண்மூடித்தனமான ஹீரோ'யிசம் மிகுந்து இருந்த தமிழ்த் திரையை, யதார்த்தம் நோக்கித் திருப்பியவர் அவர். 
 


திரைப்பாடல் - அழகும் ஆழமும் -11 எதையும் தாங்கும் இதயம் - இதையும் தாங்கும். 

தலைசிறந்த படைப்பாளிகள் பலரைத் தந்துள்ளது தமிழ்த் திரையுலகம். அவர்களில் மிக முக்கியமானவர் -இயக்குநர் ஸ்ரீதர்.  புதிய பாதை வகுத்த, 'ட்ரெண்ட் செட்டர்', தமிழ்த்திரை ரசிகர்களின் ரசனையை,  பல படிகள் உயர்த்தியவர் அவர். 'காதல், சண்டை, கவர்ச்சி, 'கலர்' நிரம்பிய, 
மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, கண்மூடித்தனமான ஹீரோ'யிசம் மிகுந்து இருந்த  தமிழ்த் திரையை, யதார்த்தம் நோக்கித் திருப்பியவர் அவர். 

Tap to resize

Latest Videos

முக்கோணக் காதல் கதைகளுக்குப் பெயர் பெற்ற ஸ்ரீதர், மிகக் குறைந்த நாட்களில் (ஒரு மாதம்) படமாக்கிய காலத்தை வென்று நிற்கும் படைப்பு - 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. 1962இல் வெளியான இப்படத்தில் கல்யாண் குமார், முத்துராமன், தேவிகா, நாகேஷ் என்று குறைந்த பாத்திரங்கள்; 'கனமான' காட்சிகள்; இயல்பான வசனங்கள்; உணர்ச்சிபூர்வ நடிப்பு - படத்தைத் தனித்துக் காட்டியது. 

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் மனதைக் கொள்ளை கொண்டன. 'முத்தான முத்தல்லவோ..'. 'சொன்னது நீதானா..' 'எங்கிருந்தாலும் வாழ்க..' ஆகிய பாடல்கள், 58 ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

அதிலும், 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...' பாடல்....  

தோல்வி, விரக்தி, சோகம், துயரம்.. இவற்றை எல்லாம் தாண்டி, வாழ்க்கையின் நிதர்சனத்தை, எளிய மொழியில், யதார்த்தமாக விளக்கிச் சொன்னது; அதிலும், 'எங்கே வாழ்க்கை தொடங்கும்...' என்கிற நிறைவுப் பத்தி....

'இதுதான் என்றைக்குமான சத்தியம்; எல்லாருக்குமான உண்மை' என்று மானுட வாழ்வின் 'மகத்துவம்' உரைக்கிற இப்பாடல் - இலக்கியத் தரத்தை, திரைப்பாடல் ரசிகர்களுக்கு அள்ளி வழங்கியது.  இப்படிப் பல பாடல்கள், அடர்த்தியாய் ஆழமாய், சங்கத் தமிழின் உச்சியைத் தொட்டு நின்றன. சாதித்துக் காட்டிய புண்ணியவான் - வேறு யார் - வாராது போல் வந்த மாமணி - ஒப்பாரும் மிக்காரும் இல்லா - கவிஞர் கண்ணதாசன். 

இதோ பாடல் வரிகள்:   

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை. 
நடந்ததையே நினைத் திருந்தால் 
அமைதி என்றுமில்லை. 

முடிந்த கதை தொடர்வதில்லை 
இறைவன் ஏட்டினிலே 
தொடர்ந்த கதை முடிவதில்லை 
மனிதன் வீட்டினிலே 

ஆயிரம் வாசல் இதயம் - அதில் 
ஆயிரம் எண்ணங்கள் உதயம். 
யாரோ வருவார் யாரோ இருப்பார் 
வருவதும் போவதும் தெரியாது. 
ஒருவர் மட்டும் குடியிருந்தால் 
துன்பம் ஏதுமில்லை. 
ஒன்றிருக்க ஒன்று வந்தால் 
என்றும் அமைதி இல்லை. 

எங்கே வாழ்க்கை தொடங்கும் -அது 
எங்கே எவ்விதம் முடியும் 
இதுதான் பாதை இதுதான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது. 
பாதை எல்லாம் மாறி வரும் 
பயணம் முடிந்து விடும். 
மாறுவதை புரிந்து கொண்டால் 
மயக்கம் தெளிந்து விடும்.

நினப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத் திருந்தால் 
அமைதி என்றும் இல்லை.

 

(வளரும்.

 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

click me!