மயக்கும் மாலை பொழுதே... அடடா! காலத்தை வென்று நிற்கும் கானம் அது..!

By Thiraviaraj RM  |  First Published Apr 9, 2020, 6:23 PM IST

ஓர் அரசன்; திடீர் என்று கண் பார்வை இழந்து விடுகிறான்; இதற்கான பழி - கதாநாயகன் மீது விழுகிறது. அரசனுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். 
 


திரைப்பாடல் - அழகும் ஆழமும்-10 : இதை விடவும், மயக்கும் பாடல் வேறு ஏது..?

அரேபிய நாடோடிக் கதைகளின் தொகுப்பு - '1001 இரவுகள்'. ஒரு பிரசினை- அதற்கான தீர்வு-வழியில் ஏராளமான சவால்கள் - நிறைவில் வெற்றி. 
இதுதான் அநேகமாக இந்தக் கதைகளின்  பொதுவான சாராம்சம். ஓர் அரசன்; திடீர் என்று கண் பார்வை இழந்து விடுகிறான்; இதற்கான பழி - கதாநாயகன் மீது விழுகிறது. அரசனுக்கு மீண்டும் பார்வை கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறான். 

Tap to resize

Latest Videos

எளிதில் செல்ல முடியாத பகாவலி நாட்டில் உள்ள ஒரு மலர், இழந்த பார்வையை மீட்டுத் தரும். வழியில் எதிர்ப்படும் ஆபத்துகளை எவ்வாறு 
எதிர்கொண்டு மலர் கொண்டு வருகிறான் என்பதே கதை. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து 1955இல் வெளிவந்த படம் - 'குலேபகாவலி'. பாரசீகச் சொல். (Gul-e-bakavali) 'குல்' - மலர்; பகாவலி - கற்பனை நாட்டின் பெயர். 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் - வெளியாகி 65 ஆண்டுகள் கழித்து, இப்போது பார்த்தாலும் பெரியவர்கள், சிறியவர்கள் அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கும் இப்படம். இலக்கியத் தமிழ், அதுவும் எம்.ஜி.ஆர். குரலில்.. நெஞ்சை வருடும். இளவரசியாக டி.ஆர்.ராஜகுமாரி, 'குல்சார்' எனும் பாத்திரத்தில் ஈ.வி.சரோஜா, மற்றொரு ராஜகுமாரியாக ராஜசுலோசனா. தங்கவேலு, சந்திரபாபு... ஆகியோரின் நளினமான நடனம், நடிப்பு - சிறந்த ரசனைக்கு நல்ல தீனி போடும்.

படத்துக்கு இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி. பாடல்கள்: தஞ்சை ராமையாதாஸ்.'கூண்டுக்கிளி' படத்துக்காக கே.வி.மகாதேவன் ஒரு 'டியூன்' போட்டு வைத்து இருந்தார்.  விந்தன் எழுதி ஏ. எம். ராஜா - ஜிக்கி பாடிய 'டூயட்' பாடல்...  சில காரணங்களால் அப்படத்தில் இடம் பெறவில்லை. 'குலேபகாவலி'யில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டது. (நன்றி - பிரபல எழுத்தாளர் ராண்டார் கை) 
 
அடடா! காலத்தை வென்று நிற்கும் கானம் அது.  மனதை மயக்குகிறது இந்த மாலைப் பொழுது. இது வேண்டாம்;  இனிமையான இரவுப் பொழுது விரைவில் வரட்டும். பனித் துளிகள் பன்னீர்த் துளிகள் ஆகட்டும்; படுக்கப் பாய் வேண்டாம்; பசும்புல் போதும். நிலவு பாலூட்டும்; தென்றல் தாலாட்டும். புன்னை மலர்கள் உதிர்ந்து போர்வையாய் மூடட்டும்.   

கவிஞரின் ஒவ்வொரு வரியிலும் காதல் கொப்பளிக்கிறது. மென்மையான குரலில் ஏ.எம்.ராஜா - ஜிக்கி இணை, மெல்லிசையில் ஒரு புதிய அத்தியாயம் படைத்த அந்தப் பாடல் இதோ: 

  
பெண்: '
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா..!

ஆண்: 
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய் போடுமே 
மயக்கும் மாலை...

பெண்: 
பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
புன்னை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே
மயக்கும் மாலை... 

ஆ: கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
பெ: காண்போம் பேரின்பமே
ஆ: வானிலும் ஏது வாழ்விது போலே
பெ: வசந்தமே இனி என்னாளும்

இருவரும் இணைந்து:
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா!
இன்னலை தீர்க்க வா!

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:- 

அத்தியாயம்:-கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!

அத்தியாயம்:- வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?

click me!