Nayanthara New movie : நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு படத்தை ஓடிடி-யில் வெளியிட தயாராகி வருகிறார் நயன்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் நயன்தாரா நடித்துள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, நயன்தாரா நடித்துள்ள புதிய படத்திற்கு ஓ2 (O2) என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நடிகை நயன்தாரா 8 வயது சிறுவனுக்கு தாயாக நடித்துள்ளார். நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்திருக்கிறார்.
படத்தின் கதைப்படி ஒரு தாய் தனது மகனுடன் பேருந்தில் செல்லும் போது விபத்தில் சிக்குகிறார். நுரையீரல் பிரச்சனையால் அவதிப்படும் அவரது மகனிடம் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று இருக்கும், விபத்தில் சிக்கியபின் சக பயணிகள், அந்த ஆக்சிஜன் சிலிண்டரை குறிவைக்கின்றனர். அவர்களிடம் இருந்து தனது மகனை அந்த தாய் எப்படி காப்பாற்றினார் என்பதை விறுவிறுப்பாக சொல்லும் படம் தான் இந்த ஓ2.
இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாம். ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஓ2 படம் மூலம் ஹாட்ரிக் ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருகிறார் நயன். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்...Mohan Juneja : கே.ஜி.எஃப் பட நடிகர் உடல்நலக்குறைவால் மரணம் - சோகத்தில் ரசிகர்கள்