’நம்ம வீட்டு பிள்ளை’விமர்சனம்...தப்பிப் பிழைத்தாரா சிவகார்த்திகேயன்?...

By Muthurama LingamFirst Published Sep 27, 2019, 3:28 PM IST
Highlights

அப்படியான நிலையில் தன்னுடைய தங்கையை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தைத் தக்கவைக்கவேண்டும் என்று நினைக்கிறார். கதை நகரவேண்டுமே அதற்காக அவர்  ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடியும்  ஐஸ்வர்யாவுக்கு மூன்று முடிச்சுகள் போட யாரும் முன்வரவில்லை. இறுதியில் நட்டி என்கிற நட்ராஜ், சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு  முன்பகையை மனதில் வைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார்.

தொடர்ச்சியான இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, ஹிட் பட ஹீரோ என்கிற கிரீடம் தலையை விட்டு இறங்கிவிடுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ரசிகர்களுக்குத் தொல்லை எதுவும் தராத படமா? பார்ப்போம்.

அம்மம்மா,சின்னம்மா, சித்தப்பா,பெரியப்பா என்று ஒரு பெரிய மெகா சீரியலுக்குத் தேவையான  குடும்பத்தை சேர்ந்தவர் சிவகார்த்திகேயன். தன்னுடைய குடும்பத்தை விட்டு கொடுக்காமல் இருந்தாலும் அவருக்கு அப்பா இல்லை என்ற ஒரு காரணத்தினால் அவரையும் அவரது தங்கை ஐஸ்வர்யா ராஜேஷையும் மற்றவர்கள் யாரும் ஒரு குடும்ப ஆளாகவே கருதுவதில்லை. இது அவருக்கு ஒரு தீராத மனக்குறையாக இருக்கிறது.

அப்படியான நிலையில் தன்னுடைய தங்கையை நல்ல ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்து தனது கெத்தைத் தக்கவைக்கவேண்டும் என்று நினைக்கிறார். கதை நகரவேண்டுமே அதற்காக அவர்  ஊர் முழுவதும் மாப்பிள்ளை தேடியும்  ஐஸ்வர்யாவுக்கு மூன்று முடிச்சுகள் போட யாரும் முன்வரவில்லை. இறுதியில் நட்டி என்கிற நட்ராஜ், சிவகார்த்திகேயனுடன் உள்ள ஒரு  முன்பகையை மனதில் வைத்து கொண்டு திருமணம் செய்து கொண்டு பழி வாங்க தொடங்குகிறார்.

தங்கையின் நல்வாழ்வுக்காக அண்ணன்கள் பொறுத்துக்கொண்டு போவதுதானே தமிழ் சினிமா நடைமுறை? அந்த நடைமுறைகளுக்கு எந்த குந்தகமும் வராமல் பல்லைக் கடித்துக்கொண்டு சாந்தம் காக்கிறார் சி.கா. அப்புறம் ஒரு சின்ன மோதல். க்ளைமேக்ஸ்.சுபம். 

அனு இம்மானுவேல்? ம் இருக்கிறார். சி.கா.வைக் காதலிக்கிறார்.டூயட் பாடுகிறார். தனக்கென்று ஒன்றிரண்டு நல்ல சீன்கள் இருக்காதா என்று பார்க்கிறார்.நத்திங் டூயிங் என்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

‘கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி தந்த மிதப்பில் செண்டிமெண்ட் சீன்களை வைத்து மீண்டும் ஒரு ஹிட்டை நோக்கிக் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் பாண்டிராஜ். அந்த முயற்சியில் அவருக்கு பாதி வெற்றிதான். 90 களில் வந்த ‘சொக்கத்தங்கம்’,’நிறைஞ்ச மனசு’ போன்ற குடும்ப செண்டிமெண்ட் படங்களை சமீபத்தில் அதிகம் பார்த்திருப்பதை யூகிக்க முடிகிறது.

நடிப்பைப் பொறுத்தவரை நாம் எப்போதும் ரிஸ்க் எடுக்கவேண்டாம். கொஞ்சம் லைட் வெயிட்டாவே போவோம் என்ற முடிவை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதிலும் பரோட்டா சூரியின் காம்பினேஷன் இவருக்கு அட்டகாசமாகப் பொருந்திப் போகிறது. இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். 

இவர்களுடன் அனு இம்மானுவேல்,பாரதிராஜா, ஆடுகளம்’நரேன், வேல.ராமமூர்த்தி, நட்டி நடராஜ், சண்முகராஜா, சுப்பு பஞ்சு,ரமா,மைனா அருந்ததி,சீமா என்று சன் டி.வி.யின் ஒரு மெகா சீரியலுக்குத் தேவையான பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா ஓரிரு சீன்கள் கொடுத்து வஞ்சகமில்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு தரம். இமான் வழக்கம் போலவே தான் ஏற்கனவே போட்ட டியூன்களை தூசு தட்டியிருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பே நடிக்க வந்த நயன்தாராவே தங்கச்சி வேடத்தில் நடித்தாலும் அவர் வயசுக்கு வந்த காட்சி ஒன்றை வைத்து அங்கே ஒரு பாடலும் வைப்பார்கள் நம்ம தமிழ் நாட்டு இயக்குநர்கள் என்னும் நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் அப்படி ஒரு பாடலை பாண்டிராஜ் வைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்கவேண்டும்.

நம்ம வீட்டுப் பிள்ளை துள்ளவும் இல்லை... அதே சமயம் தொல்லையும் இல்லை.


 

click me!