கார் விபத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் மரணம்...!

By vinoth kumarFirst Published Oct 2, 2018, 9:54 AM IST
Highlights

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்துவந்த  பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு மரணமடைந்தார் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தீவிர சிகிச்சையில் இருந்துவந்த  பிரபல இசையமைப்பாளர் பால பாஸ்கர் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவு மரணமடைந்தார் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விபத்தில் தனது மகளை பறிகொடுத்து நிலையில், உயிருக்கு போராடிய பால பாஸ்கர் தற்போது இந்த உலகை விட்டு மறைந்தார். இவரின் மனைவிக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பாலபாஸ்கர். வயலின் இசை கலைஞரான அவர் படங்கள், தொலைக்காட்சி தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். 12 வயதில் இருந்து அவர் மேடை கச்சேரிகளில் வயலின் வாசித்து வருகிறார். பால பாஸ்கர் தனது மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வினியுடன் திருச்சூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கையில், திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிபுரத்தில் கார் மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை தேஜஸ்வினி இறந்துவிட்டது. படுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி, அர்ஜுன் ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது, இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பால பாஸ்கர் இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு மரணமடைந்தார் என்று அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை வட்டாரங்களும், குடும்பத்தினரும் தெரிவிக்கின்றனர். 

ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் பாலபாஸ்கர் உடல், திருவனந்தபுரத்தில் பால பாஸ்கர் படித்த கல்லூரி வளாகத்தில் வைக்கப்படும், இன்று மாலை தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். பாலபாஸ்கருக்கும், லட்சுமிக்கும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு தேஜஸ்வினி பிறந்தார். அவரும் இறந்துவிட்டார்.

click me!