’ஓ.பி. அடிக்க நினைப்பவர்கள் இப்போதே கட்சியை விட்டுக் கிளம்பலாம்’...கறார் காட்டும் கமல்...

By Muthurama LingamFirst Published May 25, 2019, 2:51 PM IST
Highlights

’இரண்டு படங்களை எட்டே மாதங்களில் முடித்து விட்டு 24 மணி நேர அரசியலுக்குத் திரும்பிவிடுவேன். அந்த சமயத்தில் கட்சிப் பணிகளில் எந்தத் தொய்வும் இருக்கக்கூடாது’ என்று தனது முக்கிய நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
 

’இரண்டு படங்களை எட்டே மாதங்களில் முடித்து விட்டு 24 மணி நேர அரசியலுக்குத் திரும்பிவிடுவேன். அந்த சமயத்தில் கட்சிப் பணிகளில் எந்தத் தொய்வும் இருக்கக்கூடாது’ என்று தனது முக்கிய நிர்வாகிகளை அழைத்து எச்சரித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

தேர்தல் முடிவுகள் வந்த மறுதினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கையோடு அன்று மாலையே தனது கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பு நடத்தியிருக்கிறார் கமல். அதில் பேசிய அவர்,“நாம் நல்ல வாக்குகள் பெற்றிருக்கிறோம். டெல்டா மாவட்டம், வடமாவட்டங்களில் வாக்குகளை மிகக் குறைவாகப் பெற்றுள்ளோம். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்.

தேர்தல்தான் முடிந்துவிட்டதே, இனி அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் போனால் போதும் என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு நாளும்  மக்கள் பணி செய்யுங்கள். மக்களின் குறையைக் கேளுங்கள், ஒவ்வொரு நாளும் களத்தில் நில்லுங்கள். தொகுதிக்குச் சென்று மக்கள் குறையைக் கேட்டுச் செய்யுங்கள். அப்படி முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம்.

மக்கள் கூப்பிடும் நேரத்திற்கு போய் குறைகளைக் கேளுங்கள்.  படப்பிடிப்பில் இருந்தாலும் என்னை அதிகாலை 4 மணிக்கு அழைத்தாலும் வருவேன், இரவு 12 மணிக்கு அழைத்தாலும் வருவேன், அதுபோல் நீங்களும் மக்கள் பணிக்குத் தயாராகிக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலில் நமக்குக் கிடைத்தது பெரிய வெற்றிதான். 16 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறோம். நம்பிக்கையுடன் மக்கள் பணியைத் தொடருங்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுச் சிறப்பாக வேலை செய்தவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வாய்ப்புகள் உண்டு.

இந்தத் தேர்தலில் கோடை வெயிலென்றும் பாராமல் கடுமையாக வேலை செய்தது யார், நிழலில் நின்றது யார், வேலை செய்யாமல் ஏமாற்றியது யார் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், அவர்கள் பெயர்களைக் குறிப்பிட நான் விரும்பவில்லை. இனியும் இப்படி இருக்கக் கூடாது. என்னுடைய ஒரு முகத்தைத்தான் பார்த்திருக்கீங்க. இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்ததில்லை. அது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் முகம். நமது பொறுப்பு கூடியிருக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றியால் மற்ற கட்சியினர் நம்மை இன்னும் துரத்துவார்கள். அதை கண்டு சோர்வடையாமல் கட்சியில் நீடிக்க விரும்புபவர்கள் மட்டும் நீடிக்கலாம்.இனி அடுத்த தேர்தல் சமயத்தில் வேலை செய்தால் போதும் என்று நினைப்பவர்கள் இப்போதே நடையைக் கட்டலாம்’என்ற கடுமையான எச்சரிக்கையுடன் தனது உரையை முடித்தாராம் கமல்.

click me!