
Maareesan Teaser : வடிவேலு, பஹத் பாசில் நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மாமன்னன் படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றை வி.கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார்.
இந்நிலையில் மாரீசன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 1.23 நிமிடம் ஓடும் இந்த டீசரை பார்க்கும் போது மாரீசன் ஒரு நல்ல படமாகத் தோன்றினாலும், சஸ்பென்ஸ் மனநிலையை உருவாக்குகிறது. ரோடு த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தின் டீசரில் பெரும்பாலும் பஹத் மற்றும் வடிவேலுவின் கதாபாத்திரங்களே பைக்கில் பயணிக்கும் படியான காட்சிகளே இடம்பெற்றுள்ளன. ஆஹா இன்ப நிலாவினிலே என்கிற பழைய பாடல் தான் இந்த டீசர் முழுக்க ஒலிக்கிறது.
இந்த பழைய பாடலை வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோர் ஆரம்பத்தில் சந்தோஷமாக பாடுகின்றனர். பின்னர் போகப் போக பாடல் சோகப்பாடலாக மாறுகிறது. படமும் இதேபோல் தான் இருக்கும் என தெரிகிறது. இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு படத்தொகுப்பாளராக ஸ்ரீஜித் சாரங் பணியாற்றி உள்ளார். இப்படத்தை முழுக்க முழுக்க அவுட் டோரில் தான் படமாக்கி இருக்கிறார்கள். மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு வில்லனாக நடித்திருந்த பஹத் பாசில், மாரீசன் திரைப்படத்தில் அவர்கள் இருவரும் நண்பர்களாக நடித்துள்ளது படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. இந்த கூட்டணிக்கு இப்படமும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.