தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஆர்.விட்டல் காலமானார்.
தமிழ் திரையுலகில், சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளவர் விட்டல். சென்னையை சேர்ந்த இவர், வயது மூப்பு காரணமாக, உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 வயதாகும் இவர், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். குறிப்பாக ஆடுபுலி ஆட்டம், படிக்காதவன், ஜப்பானில் கல்யாண ராமன், ராஜா சின்ன ரோஜா, முரட்டு காளை, நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, சர்வர் சுந்தரம், விக்ரம் போன்ற 170 படங்களில் பணியாற்றியுள்ளார். பட தொகுப்பாளர் மட்டும் இன்றி, முத்தான முத்தல்லவோ, பெண்ணைச் சொல்லி குற்றமில்லை, முடிசூடா மன்னன் டைரக்ஷன் செய்த படங்களாகும். அதே போல் வீட்டுக்கு வந்த மருமகள், உன்னைத்தான் தம்பி, எங்களுக்கும் காதல் வரும், தொட்டதெல்லாம் பொன்னாகும், முத்தான முத்தல்லவோ போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய பலர், இன்று சினிமாவில் முன்னணி பட தொகுப்பாளர்களாக உள்ளனர்.
அதிகபட்சமாக ரஜினி - கமல் படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளதால், ஆர்.விட்டல் தலைவருக்கும் - உலக நாயகனுக்கும் மிகவும் நெருக்கமானவர். இவரின் இழப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதி சடங்குகள்... டைரக்டர்ஸ் காலணியில் உள்ள அவருடைய வீட்டில் காலை 11 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.