இவர் இல்லை என்பதை ஏக்க மனம் மறுத்தாலும்... ஓவ்வொரு நாளும் இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களுடன் வாழ்த்து கொண்டிருக்கும் எஸ்.பி.பி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் தான் இன்று.
ஜூன் 4 ஆம் தேதி, இந்த மண்ணில் உதித்த சங்கீதா மேகம் தான் மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி பாலசுப்ரமணியம். ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவரது, தந்தை சாம்பமூர்த்தி, அரிகதை காலட்சேபக் கலைஞர் ஆவார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் ஆவர். இவர்களில் பாடகி எஸ். பி. சைலஜா இவரது இளைய சகோதரி. மேலும் எஸ்.பி.பி.யின் மகன் சரணும், பல படங்களில் பின்னணி பாடியுள்ளது மட்டும் இன்றி, சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
சிறிய வயதில் இருந்தே இசையின் மீது அளவற்ற ஆர்வம். அப்பா ஹார்மோனியை பெட்டியில் வாசிக்கும் போது அதனை உற்று நோக்கி ரசிக்க மட்டும் அல்ல வாசிக்கவும் கற்று தேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே பல பாடல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றார். 1964 ஆம் ஆண்டு சென்னையை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் பாடி முதல் பரிசைப் பெற்றார்.
எப்படியும் திரைப்பட வாய்ப்பை பெற வேண்டும் என்று விடா முயற்சியுடன் இந்த இவர், அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்புக் கேட்பதுமாக இருந்த காலங்களும் உண்டு. பாலசுப்பிரமணியம் பின்னணிப் பாடகராக முதன் முதலில் 1966 ஆண்டு வெளியான 'சிறீ சிறீ சிறீ மரியாத ராமண்னா' என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ். பி. கோதண்டபாணியின் இசையில் பாடினார். இப்பாடல் பதிவான எட்டாம் நாளில் கன்னடத்தில் நக்கரே அதே சுவர்க என்ற திரைப்படத்திற்காகப் பாடினார்.
இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்துக்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும். ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் 'இயற்கையெனும் இளையகன்னி' என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளிவந்தது. இந்த பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, தொடர்ந்து பல படங்களில் மட்டும் அல்ல பல மொழிகளிலும் பாடல்கள் பாடுவதில் பிஸியானார் எஸ்.பி.பி.
பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் என்ற திரைப்படத்திற்காகப் பாடல்களைப் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். 16 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையை புரிந்தவர். 6 முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன், கடைசியாக பத்மவிபூஷன் என இந்தியாவில் உள்ள அனைத்து உயரிய விருதுகளையும் பெற்ற ஒரு கலைஞன். 45 படங்களுக்கு இசையமைத்து உள்ளார். 70 படங்களில் நடித்துள்ளார். 120 க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். அதோடு பல சினிமாக்களை தயாரித்து இருக்கிறார்.
கொரோனா தொற்றால் பாதிப்படையும் வரை பாடிக்கொண்டே இருந்த கலைஞர். தன்னுடைய உடல் நிலை குறித்து ரசிகர்கள் பீதியடைந்து விட கூடாது என, வீடியோ மூலம் லேசான தொற்று தான் இருக்கிறது. விரைவில் நலம் பெற்று வருவேன் என கூறியவர். ஆனால் இனி வரவே மாட்டார் என ஒருவர் கூட நினைக்கவில்லை. இசையை மட்டுமே ரசிகர்கள் மனதில் விட்டு விட்டு... ஆயிரம் நிலவை போல் இசையால் ஒளிர்ந்துகொண்டிருந்த எஸ்.பி.பி செப்டெம்பர் மாதம் மறைந்தார்.
இவர் இல்லை என்பதை ஏக்க மனம் மறுத்தாலும்... ஓவ்வொரு நாளும் இனிமையான பாடல்கள் மூலம் ரசிகர்களுடன் வாழ்த்து கொண்டிருக்கும் எஸ்.பி.பி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் தான் இன்று.