தளபதி விஜய், தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அரசியலில் அதிகார பூர்வமாக கால் பதித்துள்ளதற்கு உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா விஜயகாந்த் கமலஹாசன் ஆகியோரது வரிசையில் நடிகர் விஜய்யும் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கடந்த பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதை உறுதி செய்யும் வகையில் சமீப காலமாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், விஜய் கட்சி தொடங்குவது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நேற்று 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி, தன்னுடைய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு.. அறிவிப்பையும் வெளியிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள், அரசியல் வாதிகள் மற்றும் பிரபலங்கள் பலர் விஜய்யின் முடிவை வரவேற்றுள்ளனர். விஜய்யின் இந்த அரசியல் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகராக இருந்து கொண்டு... அரசியலிலும் அவ்வப்போது தன்னுடைய இருப்பை வெளிப்படுத்தி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான உலக நாயகன் கமல்ஹாசன் விஜய்யின் முடிவுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நம்மவர், திரு கமலஹாசன் அவர்கள் இன்று புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் திரு விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது".