பாஜக ஆளும் மணிப்பூரில், சமீபத்தில் வெடித்த வன்முறையை பாஜக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக கூறி பாஜக அரசை மணிப்பூரில் கலைக்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டடுள்ளது.
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடித்த வன்முறை சம்பவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதற்கு மணிப்பூரை ஆளும் பாஜக கட்சி உரிய நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதேபோல் இந்த வன்முறை சம்பவத்திற்கு இடையே பல கொடூர சம்பவங்களும் நிகழ்ந்தது இந்தியாவையே உலுக்கியது.
குறிப்பாக இந்த வன்முறை சம்பவத்திற்கு இடையே இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த சில வீடியோக்கள் வெளியாகி, பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானது. இந்த மணிப்பூர் சம்பவத்திற்கு மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தது மட்டுமின்றி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொடூரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறி வந்தனர்.
திருமணமான ஒரே வருடத்தில்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் அதிர்ச்சி மரணம்!
இந்த சம்பவம் குறித்து, உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே, "மணிப்பூரில் நடந்த கொடூரத்தால் ஜனநாயகம் சீர்குலைந்து விட்டது". குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்துவதற்கான சூழல் அங்கு நிலவுகிறது என கூறி இருந்த நிலையில், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "மணிப்பூர் இனக்கலவரம், வன்முறை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ள மணிப்பூர் மாநில அரசைக் கலைத்திட வலியுறுத்தியும் மக்கள் நீதி மய்யம் சார்பில், வரும் 6-ம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு வள்ளுவர்கோட்டத்திலும், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு கோயம்புத்தூரிலும், காஞ்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு காஞ்சிபுரத்திலும், மதுரைமண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு மதுரையிலும், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு சேலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதேபோல, திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு நாகப்பட்டினத்திலும், நெல்லை மண்டலத்துக்கு உட்பட்டமாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும் மற்றும் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு திட்டக்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மநீம மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்பார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.