இளையராஜாவை அவமதிக்கிறீங்களா ? தயாரிப்பாளர்களை வெளுத்து வாங்கிய நீதிபதிகள் !!

By Selvanayagam PFirst Published Feb 2, 2019, 9:16 AM IST
Highlights

இளையராஜா பாராட்டு விழாவுக்கு தடைகேட்டு வழக்கு தொடர்வது என்பது இளையராஜாவை அவமதிக்கும் செயல் என வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்களை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று  மற்றும் நாளை இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற  நீதிபதி கே.கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தார். 

இந்த நிலையில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்கு விவரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சி, இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி. இந்தி பாடலை கேட்டுக்கொண்டிருந்தவர்களை எல்லாம் தமிழ் பாடலை கேட்க வைத்தவர் இளையராஜா. 

தமிழ் படங்களில் வெளியான பாடல்கள் எல்லாம், இந்தி பாடல்களாக மாற்றியவரும் அவர் தான். இந்தியாவே உற்றுநோக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவுக்கு தடைகேட்பதே, அவரை அவமதித்து விட்டதாகத்தான் கருதமுடியும்’ என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் இந்த நிகழ்ச்சிக்கான வரவு-செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டு கண்காணிக்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க முடியாது’ என்று கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 

click me!