சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜயகாந்த் பற்றி பலரும் அறிந்திடாத தகவலை வெளியிட்டுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் மரணமடைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி தேமுதிக நிர்வாகிகள் அவரது நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அதுமட்டுமின்றி அங்கு வந்திருந்த தொண்டர்களுக்காக சிறப்பு அன்னதானமும் தேமுதிக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க கேப்டன் விஜயகாந்த் பாடல்கள் பாடும் சுற்று நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பலரும் அறிந்திடாத தகவல் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார். விஜயகாந்த் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சின்ன கவுண்டர் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் ஆர்வி உதயகுமார். அப்படம் எடுத்து முடித்து பர்ஸ்ட் காப்பி வந்த உடனேயே அப்படத்தை பற்றி, புரட்சி தலைவி ஜெயலலிதாவுக்கு தெரிந்துவிட்டது. உடனே ஆர்வி உதயகுமாருக்கு போன் அடித்து அந்த படத்தை நான் பார்க்கக் கூடாதா என கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.
இதையும் படியுங்கள்... காவல்துறை தடையை மீறி பிரேமலதா பேரணி; திரண்ட தேமுதிக தொண்டர்கள்; குலுங்கிய சென்னை!
அப்போது அவருக்கு சிறப்பு காட்சி திரையிட்டு காட்டி இருக்கிறார் உதயகுமார். படம் முழுவதும் பார்த்துவிட்டு, நீங்கெல்லாம் அந்த காலத்துல எங்க போனீங்க, எனக்கு டைரக்டரா இருந்திருக்கலாம். ஐ மிஸ் யூ என ஜெயலலிதா சொன்னதும் சிலாகித்துப் போனாராம் உதயகுமார். குறிப்பாக சுகன்யா நடித்த தெய்வானை கேரக்டரை பாராட்டியதோடு, விஜயகாந்தை மிகப்பிரமாதமாக நடிக்க வச்சிருக்கீங்க என சொல்லி பாராட்டுக்களை தெரிவித்தாராம் ஜெயலலிதா.
ஜெயலலிதா சின்ன கவுண்டர் படம் பார்த்த தகவல் கலைஞர் கருணாநிதி காதுக்கு சென்றதும், அவர் உடனே விஜயகாந்துக்கு போன் பண்ணி நாங்க படம் பார்க்க மாட்டோமா, என கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பும் வேலையில் பிசியாக இருந்த உதயகுமார், உடனே அவருக்கு மதியம் 2 மணிக்கு ஒரு ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது படத்தை பார்த்த கலைஞர், விஜயகாந்திடம்... விஜி இந்த படத்துல தான் நீ நடிச்சிருக்க என சொன்னாராம். இப்படி அந்த காலகட்டத்தில் இரு பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தை போட்டிபோட்டு பார்த்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன்; கேப்டன் விஜயகாந்த் பற்றிய அரிய தகவல்கள்!