
சீரியல்கள் மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி விஜய் தொலைக்காட்சி தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே வைத்துள்ளது. சூப்பர் சிங்கர், பிக் பாஸ், கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். குறிப்பாக குக் வித் கோமாளி தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சமையல் மற்றும் நகைச்சுவை கலந்த நிகழ்ச்சி ஆகும். ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில சீசன்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் ஆறாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த சீசனில் பிரியா ராமன், கஞ்சா கருப்பு, ஷபானா ஷாஜகான், சௌந்தர்யா சிலுகுரி, ஜாங்கிரி மதுமிதா, ராஜூ ஜெயமோகன், உமைர் லத்தீப், சுந்தரி அக்கா, ஐடி விவசாயி என பத்து பேர் போட்டியாளர்களாக பங்கெடுத்தனர். புகழ், குரேஷி, ராமர், சுனிதா ஆகியோருடன் சௌந்தர்யா நஞ்சுண்டன், டாலி, சர்ஜின் போன்றோர் புதிய கோமாளிகளாக பங்கெடுத்து வருகின்றனர். நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு, கௌசிக் ஆகியோர் உள்ளனர். ஐந்து சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன் ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் முதலாவதாக சௌந்தர்யா சிலுகுரி, இரண்டாவதாக கஞ்சா கருப்பு, மூன்றாவதாக சுந்தரி அக்கா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
முந்தைய சீசன்களில் ஒரு வாரம் நடைபெறும் சமையல் போட்டியின் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்தே எலிமினேஷன் நடைபெறும். ஆனால் இந்த சீசனில் ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்கள் நடக்கும் போட்டியில் எடுக்கும் மதிப்பெண்களின் கூடுதலை வைத்து மூன்றாவது வாரம் யார் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கிறார்களோ அவர்களை வெளியேற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று பேர் வெளியேறிய நிலையில், தற்போது நான்காவது போட்டியாளர் வெளியேறுவதற்கான போட்டி இந்த வாரம் நடைபெற்றது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்த வாரம் சமையலுக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை மூடினர். பின்னர் சீக்ரெட் பாக்ஸ் என்கிற பெட்டியையும் நடுவர்கள் கொடுத்தனர்.
புரோட்டின் சேலஞ்ச் என்கிற பெயரில் 7 போட்டியாளர்களுக்கும் ஏழு விதமான புரோட்டின் உணவுகள் வழங்கப்பட்டது. அத்துடன் சீக்ரெட் பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்து மட்டுமே சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன், நந்தகுமார், மதுமிதா மற்றும் ஷபானா ஆகிய நான்கு பேரும் டேஞ்சர் சோனில் இருந்தனர். மூன்று வாரங்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதுமிதா மிகக் குறைவான மதிப்பெண்களை எடுத்திருந்தார். எனவே இந்த வாரம் மதுமிதா வெளியேற்றப்பட்டார். வெளியேறுவதற்கு முன்னர் அவர் தனக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்த போட்டியாளர்களுக்கு இடையே உள்ள நட்பு பற்றியும் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
கடைசியாக அனைவரிடமும் விடைபெற்று கொண்டு மதுமிதா போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த சீசனில் முதல்முறையாக மூன்று நடுவர்களிடமிருந்தும் 10-10-10 என்கிற முழு மதிப்பெண்களை பெற்ற முதல் போட்டியாளர் மதுமிதா தான். ஆனால் அவரது எலிமினேஷன் சகப் போட்டியாளர்கள், கோமாளிகள் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவர் வெளியேறிய போது கோமாளிகள் மற்றும் சகப் போட்டியாளர்கள் கண் கலங்கினர். இந்த எபிசோடு உணர்ச்சிகரமான தருணங்களால் நிறைந்திருந்தது. அவரின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த சீசனில் அவரது சமையல் திறன் மற்றும் கோமாளிகள் உடனான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அவரது திறமை, நிகழ்ச்சியில் அவர் காட்டிய பங்களிப்பு காரணமாக இந்த முடிவு நியாயமற்றது என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதுமிதாவின் வெளியேற்றம், சமூக வலைதளங்களில் விவாதங்களையும் கிளப்பி இருக்கிறது. அவரது திறமை மற்றும் ரசிகர்களின் ஆதரவு இருந்த போதிலும் குறைவான மதிப்பெண்கள் காரணமாக அவர் வெளியேறியது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட மதுமிதா அங்கு நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.