JaiBhim | அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத சிங்கமாய் களமாடும் சூர்யா. ரசிகர்களை உற்சாகமாக்கிய சூர்யாவின் ஒத்த ட்வீட்

Published : Nov 17, 2021, 05:43 PM ISTUpdated : Nov 17, 2021, 05:50 PM IST
JaiBhim | அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத சிங்கமாய் களமாடும் சூர்யா. ரசிகர்களை உற்சாகமாக்கிய சூர்யாவின் ஒத்த ட்வீட்

சுருக்கம்

திரைப்படத்திற்காக ஒரு அரசியல் கட்சி மற்றும் சாதிய அமைப்புகளின் பகையை சூர்யா எதிர்கொள்வது இதுவே முதல்முறை. ஆனாலும் எதற்கும் சளைக்காமல் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சூர்யா மற்ற உச்ச நடிகர்களையே வியக்க வைக்கிறார்.  

திரைப்படத்திற்காக ஒரு அரசியல் கட்சி மற்றும் சாதிய அமைப்புகளின் பகையை சூர்யா எதிர்கொள்வது இதுவே முதல்முறை. ஆனாலும் எதற்கும் சளைக்காமல் தமது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சூர்யா மற்ற உச்ச நடிகர்களையே வியக்க வைக்கிறார்.

தமிழ்நாட்டில் கனமழை, பெரும் வெள்ளம் இப்படியான இயற்கை சீற்றங்களையும் தாண்டி வீசிக்கொண்டிருக்கிறது ஜெய் பீம் என்ற சூர்யாவின் அனல் காற்று. ஜெய் பீம் படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டதாக அந்த சமூகத்தினர் மற்றும் அதன் அரசியல் பிரிவான பா.ம.க.-வினர் நாளுக்கு நாள் கொதிப்படைத்து கொண்டே செல்கின்றனர். ஆனால் எளிய மக்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கையை, குறளற்றவர்களின் குரலாக நின்று சூர்யா வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாக மற்றொரு தரப்பினர் சூர்யா, ஜோதிகாவுக்கு புகழ் மாலைகளை அள்ளி வீசி வருகின்றனர்.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், நடித்த அண்ணாத்த திரைப்படத்தை வந்து மறைந்த சுவடு தெரியாமல் ஆக்கிரமித்து நிற்கிறது ஓ.டி.டி. தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம். சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் கேட்க வைப்போம் என்று சூளுரைக்கும் வன்னியர் சமூகத்தினர், ஒவ்வொரு நாளும் தங்களது போராட்ட வடிவங்களை மாற்றிக்கொண்டே செல்கின்றனர். முதலாவதாக அன்புமணி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த சூர்யா, தமது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல், மிகவும் உயரிய நோக்கத்தோடு எடுத்த திரைப்படத்தை, பெயர் அரசியலில் சுருக்குவிடாதீர்கள். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று கூறியிருந்தார்.

சூர்யா இறங்கிவராததை அடுத்து பா.ம.க.-வினர் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜெய் பீம் படத்திற்காக நஷ்ட ஈடு கேட்டு சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கும், படத்தை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனத்திற்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து #பணம்_பறிக்கும்_பாமக என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டானது. இதனிடையே மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் ஓடிய திரையரங்கில் பா.ம.க.-வினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சூர்யாவின் படம் நிறுத்தப்பட்டு, வேறொரு படம் திரையிடப்பட்டது. அடுத்த கட்டமாக சூர்யாவை உதைப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனிசாமி பற்றவைத்தார். இந்த தீ தமிழகம் எங்கும் பரவி அனலை கக்கி வருகிறது. இது அராஜக அரசியல் என்று விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டித்துள்ளன. திரைத்துறையினரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் #WeStandWithSurya என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. இதனிடையே ரசிகர்கள் அளித்த புகாரின் பேரில், பா.ம.க. மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் அமைப்பினர் சூர்யாவின் புகைப்படங்களை செருப்பால் அடித்து அவமதித்துள்ளனர். சூர்யா படங்களை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்றும் பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். சூர்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இதனிடையே இப்பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா, நடிகர் நாசர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் இப்பிரச்சினை குறித்து முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை.

சூர்யாவுக்காக நாங்கள் களத்தில் நிற்போம் என்று ரசிகர்களை போலவே அரசியல் கட்சிகளும் வரிசைகட்டி நிற்கின்றன. இந்தநிலையில் தமக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி கூறி சூர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், Jai Bhim மீது நீங்கள் காட்டிய அன்பு அளவிட முடியாதது. இதற்கு முன்னர் இதுபோன்ற பேரன்பு எனக்கு கிடைத்ததில்லை. நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் எவ்வளவு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி என்று அதில் கூறியுள்ளார்.

twitter.com/Suriya_offl/status/1460926671830196229?s=20

 

அதேபோல் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் சூர்யா நன்றி கூறியுள்ளார். அதில், தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி. சட்டமும், நீதியும் ஒப்பற்ற ஆயுதங்கள் என்பதை உரக்க கூறவே #JaiBhim திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் ஜெய் பீம் படத்தை பாராட்டி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சரத்குமார், கேரள முன்னாள் அமைச்சர் சைலஜா டீச்சர் உள்ளிட்டோருக்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?