பிரபல பாடகியும், இளையராஜாவின் ஒரே மகளுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் ரஜினிகாந்த் பண்ணைபுரம் செல்ல உள்ளதாக, புதிய தகவல் ஒன்று வெளியான நிலையில் உண்மை என்ன என்பதை அவரின் PRO ரியாஸ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய உன்னதமான இசையால் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவருடைய ஒரே மகளான பவதாரிணிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் நான்காவது ஸ்டேஜில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதால், மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆயுர்வேத முறையில் சிகிச்சை பெறுவதற்காக கணவர் மற்றும் சகோதரர்களுடன் பவதாரணி இலங்கை சென்றார்.
பவதாரிணிக்கு தொடர்ந்து ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25ஆம் தேதி மாலை 5 மணி அளவில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பவதாரிணியின் உடலை அவருடைய சகோதரர் யுவன் சங்கர் ராஜா பெற்றுக்கொண்டார். பின்னர் டி நகரில் உள்ள இசைஞானி இளையராஜா வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல் அங்கு பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்கு சில மணிநேரம் வைக்கப்பட்டது.
பின்னர் பவதாரணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்த நிலையில், இன்று பாவதாரிணியின் உடலுக்கு குடும்ப முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடலுக்கு, நேற்று ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தாத நிலையில், இன்று பண்ணைப்புரம் செல்ல உள்ளதாக ஒரு வதந்தி சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பி ஆர் ஓ ரியாஸ், மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.