
விஷாலின் அதிரடி நடிப்பில், தமிழ் திரையரங்குகளின் திரையை இரும்புத்திரையாக மற்றியிருக்கிறது இரும்புத்திரை திரைப்படம். துப்பறிவாளன் திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் விறுவிறுப்பு நிறைந்த திரைப்படமாக இரும்புத்திரை இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் நடக்கும் டிஜிட்டல் கொள்ளை தான் படத்தின் கதைக்கரு.
இராணுவத்தில் பயிற்சி அலுவலராக இருக்கும் விஷால் எதற்கெடுத்தாலும் கோபப்படும், கடன் வாங்குவதையே சுத்தமாக விரும்பாத ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, பொறுப்பான இளைஞனாக திரையில் தோன்றுகிறார். தன் தந்தை கடன் வாங்கியதால் நேர்ந்த அவமானங்கள் தான் அவரின் இந்த இயல்புக்கு காரணம் என காட்டும் இடங்களில் செண்டிமெண்ட். அதனை தொடர்ந்து தன் தங்கையின் திருமணத்திற்காக சூழ்நிலை காரணமாக ஒரு புரோக்கரின் வழிகாட்டுதலால் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெறுகிறார் விஷால்.
அந்த பணம் வங்கியில் கிடைத்த அடுத்த நாளே விஷாலின் வங்கி கணக்கில் இருந்து காணமல் போகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விஷாலின் தேடல் வேட்டை விறுவிறுப்புடன் தொடங்குகிறது.இரும்புத்திரையில் ஸ்மார்ட்டான வில்லனாக வருகிறார் ஆக்ஷன் கிங் அர்ஜீன்.யுவனின் பின்னணி இசையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும், அரங்கை அதிர வைக்கிறார் அர்ஜூன். டிஜிட்டல் உலகில் எந்த ஒரு தகவலுமே பாதுகாப்பானதாகவோ, இரகசியமாகவோ இல்லை. ஒவ்வொருவரின் ஸ்மார்ட் ஃபோனும் பலரின் கண்காணிப்பில் தான் இருக்கிறது என்பதை இந்த திரைப்படம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் என்ன? என்பதை தொழில்நுட்ப ரீதியில் இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் வியக்கவைக்கிறது. அடுத்தடுத்து விறுவிறுப்பை எற்றும் கதைக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை மேலும் வலு சேர்த்திருக்கிறது. சைக்கியாட்ரிஸ்ட்டாக வரும் சமந்தாவின் நடிப்பு அளவாகவும் பாராட்டும்படியாகவும் இருக்கிறது.. மொத்தத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பதில் இரும்பு பெட்டகம் அல்ல, இரும்புத்திரை தான் என தெளிவாய் கூறியிருப்பதில் ,அறிமுக இயக்குனர் மித்ரன் அசத்தியிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.