பிரபல கிடார் இசைக் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் உடல்நல குறைவால் மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களிடம் கிடார்ஸ்டாக இருந்த, பிரபல இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவரது மரணத்திற்கான முழு காரணம் தெரியவில்லை.
ஸ்டீவ் வாட்ஸ், கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான, வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை, போடா போடியில் இருந்து போடா பொடி, உள்ளிட்ட பல படங்களில் கிடாரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார். மேலும் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான 'உப்பு கருவாடு' என்ற தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் காமெடி நடிகர் கருணாகரன் ஹீரோவாகவும், பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலக்ஷ்மி ஹீரோயினாகவும்... முக்கிய வேடத்தில் நந்திதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய 11 வயதில் இருந்து கிடார் வாசித்து வரும் ஸ்டீவ் வாட்ஸ், இளையராஜா, சிவமணி போன்ற பல பலருடன் பணியாற்றியுள்ளார். சினிமாவை தொடர்ந்து, பல்வேறு ரியாலிட்டி இசை நிகழ்ச்சிகளிலும் கிட்டார் வாசித்துள்ளார். கிடார் வாசிக்க ஆர்வம் காட்டிய பல மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இசை பயிற்சி வழங்கி வந்தார். 43 வயதே ஆகும் இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.