நிலவில் நிலம் வைத்திருக்கும் நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு மையான இஸ்ரோவின் வெற்றிகரமான நிலவு பயணம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையில் ஆழ்த்தியுள்ளது, ஆனால் சில பிரபலங்கள் ஏற்கனவே நிலவில் ஒரு நிலத்தை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ரியல் எஸ்டேட் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த பிரபலங்கள் தங்கள் முதலீடுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நிலவில் நிலம் வைத்திருக்கும் நடிகர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஷாருக்கான்
பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் நிலவில் நிலத்தை வைத்திருக்கிறார், அந்த பகுதி ‘Sea of Tranquilly.’ என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷாருக்கானின் வெறித்தனமான ரசிகை ஒருவர் 2009 முதல், அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சந்திர நிலத்தை பரிசாக அளித்து வருகிறார். நடிகர் ஷாருக்கானும் இந்த தகவலை ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் “ஆஸ்திரேலிய பெண்மணி ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்தநாளில் எனக்காக நிலவில் ஒரு சிறிய நிலத்தை வாங்குகிறார்.
லூனார் ரிபப்ளிக் சொசைட்டியிலிருந்து அதற்கான சான்றிதழ்களை நான் பெறுகிறேன். மேலும் அந்த பெண் எனக்கு கலர்ஃபுல்லான இமெயில்களையும் அனுப்பி வருகிறார். அதில் ஒரு வரி சிவப்பு, ஒன்று நீலம் மற்றும் பல வண்ணங்களில் அவர் மெயில் அனுப்புவார். உலகளவில் பலரின் அன்பைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார். இதுவரை ஷாருக்கான் நிலவில் பல ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக குவித்துள்ளார், ஒவ்வொரு ஏக்கருக்கும் சுமார் 37.50 டாலர் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் சிங் ராஜ்புத்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வானியல் அதிசயங்கள் மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வந்தார். அவர் 2018 இல் நிலவின் தொலைதூரத்தில் நிலத்தை வாங்கியபோது தலைப்புச் செய்திகளில் இடம்பிட்த்தார். நடிகர் சுஷாந்த் வாங்கிய இடம், Sea of Muscovy என்று அழைக்கப்படுகிறது. அதன் மதிப்பு சுமார் ரூ. 55 லட்சம், பிரபஞ்சத்தின் மீதான தனது அன்பைக் காட்டுகிறது. Meade 14′′ LX600 என்ற டெலஸ்கோப்பையும் சுஷாந்த் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரியங்கா சாஹர் சவுத்ரி - அங்கித் குப்தா
வெள்ளித் திரை பிரபலங்கள் மட்டும் நிலவில் நிலம் வாங்கவில்லை. சின்னத்திரை பிரபலம் ஒருவரும் நிலவில் நிலம் வாங்கி உள்ளார். ஹிந்தி "பிக் பாஸ் 16 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிரபலங்களான பிரியங்கா சாஹர் சௌத்ரி மற்றும் அங்கித் குப்தா ஆகியோருக்கு ஒரு தீவிர ரசிகர் நிலவில் ஒரு தனித்துவமான நிலத்தை பரிசாக வழங்கினார். இதன் மூலம் நிலவில் நிலம் வைத்திருக்கும் வெகு சில பிரபலங்களில் இந்த இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், ஆஸ்திரேலிய நடிகை நிக்கோல் கிட்மேன் உள்ளிட்ட பல பிரபலங்களும், தொழிலதிபர்கள் சிலரும் கூட நிலவில் நிலம் வாங்கி உள்ளன. எனினும் நீங்களும் நிலவில் நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தால், The Lunar Registry என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களை சரிபார்க்கலாம்.