முன்னாள் ஒன் டைரக்ஷன் பாடகரான லையாம் பெயினே ஓட்டல் அறையில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் ஒன் டைரக்ஷன் பாடகரான லையாம் பெயினே பியூனஸ் அயர்ஸில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தபோது நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். மூன்றாவது தளத்தில் இருந்த தனது ஓட்டல் அறையின் பால்கனியில் இருந்து குதித்து லையாம் பெயினே உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அர்ஜெண்டினா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்தபோது லையாம் பெயினே குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 31 வயதே ஆகும் லையாம் பெயினே தன்னுடைய சுயாதீன இசைப் பாடல்களால் ரசிகர்களை ஈர்த்து வந்தார். அவரின் இந்த விபரீத முடிவு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒன் டைரக்ஷன் என்கிற பாப் இசைக்குழுவின் மூலம் தான் லையாம் பெயினே மிகவும் பிரபலம் ஆனார்.
ஒன் டைரக்ஷன் பாப் இசைக்குழு உலகின் மூன்றாவது சிறந்த இசைக்குழுவாக 2024-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. லையாம் பெயினே 70 மில்லியன் டாலர் சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்து வந்துள்ளார். லையாம் பெயினே ஓட்டல் அறையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்ததும் அங்கு அவரது ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி உள்ளனர்.
லையாம் பெயினேவின் தற்கொலை குறித்து ஓட்டலில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரிட்டிஷ் டிவி பிரபலமும், பாடகியுமான செரில் என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு பியர் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. லையாம் பெயினேவின் மறைவால் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் உள்ளனர். லையாம் பெயினேவின் மறைவுக்கு சமூக வலைதளம் வாயிலாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.