விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே நடைபெற்று வருவதால், அங்கு ரசிகர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுதவிர மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மன்சூர் அலிகான், மலையாள நடிகர் பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஆந்திரா சென்றுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தலகோனாவில் தான் தற்போது லியோ பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படியுங்கள்... ஒரே நாளில் யூடியூப்பில் அதிக லைக்ஸ் அள்ளிய டாப் 5 தமிழ் சாங்ஸ்; என்ன லிஸ்ட் முழுக்க விஜய் பாட்டு தான் இருக்கு!
இந்நிலையில், படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஆந்திரா சென்றுள்ளதை அறிந்த ரசிகர்கள், அங்கு விஜய்யை காண படையெடுத்து வந்துள்ளனர். தன்னைக் காண வந்த ரசிகர்கர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கேரவனில் இருந்து வந்து அவர்களை நோக்கி கையசைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஜய். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய்யை பார்த்த குஷியில் ரசிகர்கள் தலைவா என கத்தி ஆரவாரம் செய்த காட்சிகளும் அதில் இடம்பெற்று உள்ளன.
இன்னும் ஒரு வாரத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட உள்ளது. இதையடுத்து எஞ்சியுள்ள நடிகர்களுக்கான காட்சிகளை ஒரு மாதத்தில் முடித்து செப்டம்பர் மாதத்தில் பின்னணி பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளாராம் லோகேஷ். லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தரமா ஒரு பாடல் ரெடி.. அதுவும் அவரோட கோரியோகிராபியில் - கொடைக்கானலில் கங்குவா லோடிங்!